
''வியட்நாம் வீடு ' சுந்தரத்தின் 'கௌரவம்' படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ' கண்ணா நீயும் நானுமா? என்ற பாடலைப் பாட வந்த போது,
படத்தின் கதை,அந்தப் பாடலைப் பாடப் போகும் கதா பாத்திரத்தின் குண நலன்கள் ,மற்றும் மனோ பாவம், ஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தக் கதா பாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு,
இன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதா பாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ்.
அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப் பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.
'இன்னும் ஒரு தடவை போடுங்கள்...இன்னும் ஒரு தடவை'...என்று...பல தடவை...திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி.
இது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது!
காரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.
ஆனால் இந்தப் பாடலை அவர் பத்துத் தடவைக்கு மேலாக கண்களை மூடிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.
இதை நீண்ட நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம் நடிகர் திலகதின் அருகே சென்று அவரிடம் மிகவும் பணிவான குரலில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
'ஒரு தடவை, அல்லது இரு தடவை பாடலைக் கேட்டு விட்டு உடனே நடிக்க வந்து விடும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்பக் கேட்பதன் ரகசியம் என்ன?'...
'சுந்தரம்!...டி.எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலை, மிகுந்த உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி இருக்கின்றார்.
பல்லவியில்...ஒரு விதமான பாவம்..ஆக்ரோஷம்...அடுத்த சரணத்தில்..இன்னொரு விதமான..தொனி.மற்ற சரணத்தில்...இன்னொரு பரிமாணம்...என குரலால் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் டி.எம்.எஸ்.
ஒரே வரியையே இரண்டு இடத்தில் 'ரிபீட்' பண்ணும் போது இரண்டு விதமான தொனிகளில் பாடுகிறார்.
உதாரணமாக ' நீயும் நானுமா?' என்ற வரியை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் ஒவ்வொரு பாவத்தில் அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.
இப்படியெல்லாம்..அற்புதமாக அவர் பாடிக் கொடுத்த பாட்டை கவனமாக நான் நடித்துக் கொடுகா விட்டால் இதைப் பாடிய டி.எம்.எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்றாராம் சிவாஜி.
நடிகர் திலகத்தின் செய் தொழில் நேர்த்திக்கும்,ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாட்டுக்கும் ,தன்னடக்கத்திற்கும் ,சக கலைஞர்களின் திறமைகளைப் பகிரங்கமாக மதிக்கும் பரந்த தன்மைக்கும் ஒரு சிலிர்க்க வைக்கும் எடுத்துக் காட்டு.
LINKS
1. டி.எம்.எஸ் , சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரின் அபூர்வ படங்கள்.
2. RADIO PROGRAMMES OF YAZHSUTHAKAR [yazh suthahar] [yazh sudhakar]
3.கே.எஸ்.ராஜா அவர்களின் குரலைக் கேட்டு ரசிக்க இங்கே சொடுக்குங்கள். [ORIGINAL VOICE OF K.S.RAJA]
--- --- ---
பாடகர்களுக்காக முதன் முதலில் உரிமைப் போர் நடத்திய டி.எம்.எஸ்....
'பாகப் பிரிவினை' படத்தின் நூறாவது நாள் விழா சென்னையில் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு 'ஏழிசை அரசர்' டி.எம்.எஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள்.
விழாவுக்கு வந்த டி.எம்.எஸ்ஸை அன்புடன் வரவேற்ற சரவணா பிலிம்ஸ் அதிபர் வேலுமணி... விழாவின் துவக்கத்தில் கடவுள் வாழ்த்துப் பாடும்படி அவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
டி.எம்.எஸ் கடவுள் வாழ்த்துப் பாடியதும் விழா துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 'பாகப் பிரிவினை' படதில் நடித்த நட்சத்திரங்களுக்கும், அந்தப் படத்தோடு சம்பத்தப்பட்ட கலைஞர்களுக்கும் வெற்றிக் கேடயங்களை பரிசளித்தனர்.
அந்தப் படத்தில் மிகவும் ஹிட்டான நான்கு பாடல்களை தாம் பாடியிருப்பதால் தம்மையும் அழைத்து வெற்றிக் கேடயம் வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் கடைசிவரை டி.எம்.எஸ் காத்திருந்தார்.
ஆனால் நடிகர் நடிகைகள் துவங்கி இசையமைப்பாளர் வரைக்கும் எல்லோருமே மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
வெற்றி கேடயங்களைப் பெற்றுச் சென்றனர்.
அந்தப் படத்தில் மிகச் சிறிய வேடத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்துக்கும் கேடயம் வழங்கப்பட்டது.
ஆனால் டி.எம்.எஸ் மட்டும் அழைக்கப்படவே இல்லை.
இந்த சம்பவம் டி.எம்.எஸ்ஸை மிகவும் ஏமாற்றமடையச் செய்ததோடு வருந்தவும் வைத்தது.
விழா நிறைவடைந்ததும் டி.எம்.எஸ்ஸை தேசிய கீதத்தையும் பாடும்படி வேண்டுகோள் விடுத்தார்கள்.
தமது வருத்தத்தை வெளியே காட்டாமல் அதையும் பாடி முடித்து விட்டு மனச் சுமையுடன் வீடு திரும்பினார் டி.எம்.எஸ்.
வீட்டுக்குத் திரும்பிய பிறகும் இந்த சம்பவம் டி.எம்.எஸ்ஸை உறுத்திக் கொண்டே இருந்தது.
ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு 'சுதேச மித்திரன்' ஆசிரியரை தொலை பேசியில் தொடர்பு கொண்டார் டி.எம்.எஸ்.
நடந்த சம்பவத்தை அவரிடம் பகிர்ந்து கொண்ட டி.எம்.எஸ்....தமது உள்ளத்து உணர்வுகளை ஒரு பேட்டியாகத் தர விரும்புவதாகக் கூறினார்.
'ஏன் இந்த ஓர வஞ்சனை?' என்ற தலைப்பில் சுடச் சுட அந்தப் பேட்டி
சுதேச மித்திரனில் பிரசுரமானது.
அந்தப் பேட்டியில் டி.எம்.எஸ் இவ்வாறு கூறியிருந்தார்.
" சென்ற வாரம் 'பாகப் பிரிவினை' படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு எனக்கும் அழைப்பு வந்தது.
விழாவில் நானும் கலந்து கொண்டு ஆரம்பத்தில் கடவுள் வணக்கமும் , நிறைவாக தேசிய கீதமும் பாடினேன்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடிகர் நடிகையர்களுக்கும்,இசையமைப்பாளருக்கும்,பாடலாசிரியருக்கும் வெற்றிக் கேடயங்களை வழங்கினார்கள்.
இத்தனை பேரையும் மறக்காமல் பரிசு கொடுத்தவர்கள் ஏன் பாடகர்களை மட்டும் மறந்து போனார்கள்?
இந்தப் படத்திலே நான் நான்கு பாடல்களைப் பாடியிருக்கிறேன்.
மறுபடியும் அந்தப் படத்தை திரையிடும் போது நான் பாடிய பாடல்களை நீக்கி விட்டு அந்தப் படத்தை திரையிட்டுப் பாருங்கள்.
அப்போதும் படம் வெற்றிகரமாக ஓடினால் நான் பாடுவதையே நிறுத்திக் கொள்ளுகிறேன்.'....என்றபடி டி.எம்.எஸ்ஸின் அந்த ஆவேசமான பேட்டி தொடர்ந்தது.
திரை உலகில் டி.எம்.எஸ்ஸின் பேட்டி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
அன்றைய பாடகர்,பாடகிகள் எல்லாரும் அந்தப் பேட்டியைப் பார்த்து மனம் குளிர்ந்தார்கள்.
டி.எம்.எஸ்ஸிடம் தொலை பேசியிலும் நேரிலும் தமது நன்றியை தெரிவித்தார்கள்.
இந்தப் பேட்டியைப் படித்துப் பார்த்த தயாரிப்பாளர் வேலுமணி அவர்கள் , அடுத்த நாளே அவசர அவசரமாக டி.எம்.எஸ்ஸை வந்து பார்த்தார். சமாதானம் சொன்னார்.
சுதேச மித்திரன் பேட்டியில் உங்கள் உள்ளத்து உணர்வுகளையும், வருத்ததையும் புரிந்து கொண்டேன்.
பாடுவதை நிறுத்தி விடுவேன் என்றெல்லாம் பெரிய பெரிய வார்த்தைகளை நீங்கள் சொல்லக் கூடாது.
உங்கள் கோபம் நியாயமானது தான்.நான் இப்போது 'பாவ மன்னிப்பு' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன்.
நிச்சயம் அந்தப் படம் பெரும் வெற்றியைப் பெறும்.
அந்தப் படத்தின் நூறாவது நாள் விழா நடைபெறும் போது நிச்சயமாக பாடகர்களுக்கும் வெற்றிக் கேடயம் வழங்குவேன் ' .....என்று உறுதிபடக் கூறினார்.
சொன்னது போலவே செய்தும் காட்டினார் வேலுமணி.
சென்னை அசோகா ஹோட்டலில் நடந்த 'பாவ மன்னிப்பு' நூறாவது நாள் விழாவில் படத்திற்காக உழைத்த அத்தனை பாடகர்களும் பாடகிகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.
அன்று முதல் மற்ற பட நிறுவனங்களும் பாடகர்களுக்கும் வெüறிக் கேடயம் வழங்கத் துவங்கின.
பாடகர்களுக்காக முதன் முதலில் உரிமைப் போர் நடத்தி அதில் வெற்றியும் கண்ட உத்தமர் என்று டி.எம்.எஸ்ஸை பாடகர் உலகமே பாராட்டியது.
'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....
மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....
yazhsudhakar@gmail.com
என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.