

நடிகர் திலகம் நடித்த 'ஞான ஒளி' படத்தில் இடம்பெற்ற...
தேவனே என்னைப் பாருங்கள் -என்
பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
என்ற பாடலை மறக்க முடியுமா?
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த இந்த பாடலின் நடுவே..
" ஓ...மைலார்ட்...பார்டன் மீ....
உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய்விட்டன...
இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே..."
என்று உணர்வுபூர்வமாக வசனங்கள் இடம் பெற்றிருந்ததன.
டி.எம்.எஸ் பாடிய அந்தப் பாடலில் வரும் மேற்படி வசனங்களை மட்டும்... நடிகர் திலகத்தையே பேசும்படி எம்.எஸ்.வி வேண்டுகேள் விடுத்தார்.
இந்த வசனங்கள்... பாடலில் எந்த இடத்தில் வருகின்றன என்பதை பாடிக்காட்டுங்கள்" என்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிவாஜி கேட்க உடனே எம்.எஸ்.வி...
" ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கின்றோம்..
நீங்கள் அறிவீர் ...மன்னித்தருள்வீர்"
என்று பாடிக் காட்டி ....
இந்த இடத்தில் தான் தாங்கள்....'O My Lord Pardone Me' என்று ஆரம்பமாகும் வசனத்தை பேசவேண்டும் என்றார்.
இவ்வளவு உச்ச ஸ்தாயியில் கொண்டு போய் பாடலை நிறுத்தி இருக்கிறீர்களே.... அதற்கு ஈடுகொடுத்து என்னால் பேச முடியாது என்றே நினைக்கிறேண். வேறு பொருத்தமானவரை அழைத்து அந்த வசனங்களைப் பேச வையுங்கள் என்றார் நடிகர் திலகம் தமக்கே இயல்பான வெளிப்படைப் பண்புடன்'
வயலின் வாத்தியக் கலைஞரும் , தமது உதவியாளருமான ஜோசப் கிருஷ்ணாவை அழைத்து அந்த வசனங்களைப் பேச வைத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
ஆனால் அவரது குரல் அந்தப் பாடலின் வீச்சுக்குப் பொருத்தி வரவில்லை.
'பல்குரல் வித்தகர்' சதன் என்பவரைக் கூப்பிட்டு ('அவள் ஒரு தொடர்கதை' படத்தில் எஸ்.பி.பி. பாடிய கடவுள் அமைத்து வைத்த மேடை' பாடலில் பல குரல்களில் அமர்க்களப்படுத்தியவர் இந்த 'சதன்') இதே வசனத்தைப் பேச வைத்தார் எம்.எஸ்.வி.
ஆனால் , அதுவும் பாடலின் போக்கோடு ஒன்றிப்போகாமல் தனித்து நின்றது.
நடப்பதை எல்லாம் தூரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் கிருஷ்ணன் - பஞ்சு, எம்.எஸ்.வியை அழைத்து...
பாடலைப் பாடிய டி.எம்.எஸ்ஸையே அந்த வசனங்களையும் பேச வைத்துப் பார்க்கலாமே என்றார்.
எம்.எஸ்.வி.... டி.எம்.எஸ்ஸிடம் அந்த வசனங்களைக் கொடுத்துப் பேசுமாறு வேண்டினார்.
டி.எம்.எஸ் உடனே நடிகர் திலகத்தின் அருகில் சென்றார்.
அந்த வசனங்களை நடிகர் திலகத்திடம் கொடுத்தார்.
"உங்கள் சிம்மக்குரலில்...அந்த வசனங்களை ஒரு தடவை எனக்குப் பேசிக்காட்டுங்கள் அய்யா" என்றார்.
நடிகர் திலகம் , அந்த வசனங்களை தமது பாணியில் டி.எம்.எஸ்ஸிடம் பேசிக்காட்டினார்.
அந்த வசனங்களைப் பேசிய போது, நடிகர் திலகத்தின் குரலில் இருந்த பாவங்களையும் ஏற்ற இறக்கங்களையும்,உணர்வுக் குமிழிகளையும் , உன்னதங்களையும் அப்படியே தமது மனதில் உள் வாங்கிக் கொண்டார் டி.எம்.எஸ்.
"நான் தயார்... ஒலிப்பதிவை ஆரம்பிக்கலாமா?" என்று டி.எம்.எஸ் சொன்னதும் ...எம்.எஸ்.வி கையசைத்தார்.
ஏக்கமும் விரக்தியும் தேவ விசுவாசமும் கொண்ட ஒரு பக்தனின் 'ஞானத் தேடல்' விளங்கும் விதமாக... உணர்ச்சிப் பிழம்பாக மாறி அந்த வசனத்தைப் பேசினார் டி.எம்.எஸ்
'அருமை டி.எம்.எஸ் அற்புதம் ' என்று நடிகர் திலகம் பாராட்டினார்.
"யான் இந்தப் பாடலைப் பாடி 30 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. ஆனால் இன்றைக்கும் என்னை சந்திக்கின்ற கிறிஸ்தவ அன்பர்கள்,இந்தப் பாடலையும் , அதில் நான் பேசிய வசனங்களையும் சொல்லிச் சொல்லி... என்னைப் பாராட்டும் போது சிலிர்ப்பாக இருக்கும் எனக்கு!...."
வழிகாட்டுவதற்கு...
ஆயன் இல்லாத ஆடு ஒன்று
திக்கற்று, பரிதவித்து
ஆண்டவரைக் கூவி அழைக்கும் பரவசத்தை
உங்கள் குரலிலேயே நாம் கண்டு நெகிழ்ந்தோம்....
மெழுகாக உருகினோம்.."
என்றெல்லாம் அவர்கள் பாராட்டுவார்கள்.
இதே போல 'அன்னை வேளாங்கண்ணி' படத்தில் யான் பாடிய
" தேவமைந்தன் போகின்றான்.." என்ற பாடலையும் அவரகள் பரவசத்துடன் பாராட்டிப் பேசுவார்கள்.
இதையெல்லாம் பார்க்கும் போது... ' விட்டகுறை தொட்டகுறை என்பார்களே.. அதேபோல பூர்வஜென்மத்தில் யான் ஒரு கிறிஸ்துவனாகப் பிறந்திருப்பேன் போலும், அந்த தேவ பந்தம் தான் இந்தப் பாடல்களில் சத்தியமும் ஒளியுமாக மலர்ந்திருக்கிறது என்று யான் நினைப்பதுண்டு என்றார் டி.எம்.எஸ்.
-யாழ் சுதாகர்
[வாசகர்கள் அனைவருக்கும்.. எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ்,
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். - யாழ் சுதாகர் ]
'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....
மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....
yazhsudhakar@gmail.com
என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.