Sunday, September 30, 2007

எம்.ஜி.ஆரின் 'ஒளி விளக்கு' போட்டோ ஆல்பம் -பகுதி-1

'ஒளி விளக்கு'எம்.ஜி.ஆர் புகைப் படங்களின் தொகுப்பைக் காண இங்கே அழுத்துங்கள்.



மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது படம் 'ஒளி விளக்கு'.


யாழ்ப்பாணம் ராஜா திரை அரங்கில்... அறுபதுகளின் இறுதியில் வெளி வந்து ஒரு கலக்குக் கலக்கிய படம்.


அதன் பின்பு 12 வருடங்களுக்குப் பிறகு இதே படம் ...பழைய படமாக யாழ் ராஜாவில் திரையிடப்பட்ட போது...தினசரி நான்கு காட்சிகளாக நூறு நாட்கள் ஓடி புதிய வரலாறு படைத்தது.


இந்தப் படத்தில் பி.சுசீலா பாடிய 'இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு...தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு... ஆன்டவனே உன் பாதங்களை கண்ணீரில் நீராட்டினேன்...'
என்ற பாடல் தான் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் உயிருக்காகப் போராடிய போது...இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள கோயில்களில் எல்லாம் ஒலித்தது.

1986 இல் நான் 'பொம்மை' பத்திரிகையில் பணியாற்றிய போது...நடிகை சௌகார் ஜானகி அவர்களைப் பேட்டி கண்ட போது...ஒளி விளக்கில் அவர் பாடி நடித்த இந்தப் பாடல் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறினார்...இப்படி...


'.... உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலம் பெறப் பிரார்த்தனை செய்வது போலப் படத்தில் நான் பாடிய பாடல் ....பதினைந்து வருடங்கள் கழித்து உண்மையாகவே அவர் உயிருக்காகப் போராடிய போது மக்களால் பிரார்த்தனைப் பாடலாகப் பயன்படுத்தப்பட்டது...என்னை நெகிழ வைத்தது...' என்றார்.


உண்மை தான். இந்தப் பாடலில் மட்டுமல்ல... எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட பல பாடல்களில்... வரப் போவதை முன் கூட்டியே சொன்ன ஒரு தற்செயலான தீர்க்க தரிசனத்தை நானும் கண்டு சிலிர்த்திருக்கிறேன்.

ஒரு பானை சோற்றுக்கு சில சோறு பதமாக...


'வாழ்ந்தவர் கோடி...மறைந்தவர் கோடி...மக்களின் மனதில் நிற்பவர் யார்?'
'மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்....ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் என்று போற்றிப் புகழ வேண்டும்'.


'கற்றவர் சபையில் உனக்காகத் தனி இடமும் தர வேண்டும்...

உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் ...உலகம் அழ வேண்டும்.
நான் ஏன் பிறந்தேன்?'

'காலத்தை வென்றவன் நீ...காவியம் ஆனவன் நீ...'

'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.'

'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.

இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.'

[ 'ஒளி விளக்கு 'ஆல்பம் மேலும் தொடரும்]