
இன்னொரு பாடகர் அல்லது பாடகியுடன் டி.எம்.எஸ் இணைந்து பாடும் பாடலை
முதலில் டி.எம்.எஸ் ஆரம்பிக்காமல் , மற்றவர் ஆரம்பிக்க
அதன் பின்பு டி.எம்.எஸ்ஸின் குரல் சற்றுத்தாமதமாக வரும்... . பாடல்களில் -
டி.எம்.எஸ். தமது அழுத்தமான முத்திரையைப் பதித்துக் கொண்டே உற்சாகமாக தாம் வந்துவிட்டோம் என்பதை குரல் குறிப்பால் உணர்த்தும் இடம் அருமை என்பதை சென்ற தொடரில் சில பாடல்களை உதாரணம் காட்டி வியந்திருந்தோம்.
அந்த வகையில் இன்னொரு பாடகருடன் டி.எம்.எஸ். பாடிய பாடல்களில் அவரது வருகையை ஆர்வத்துடிப்போடு எதிர்பார்க்க வைக்கும் இன்னும் சில பாடல்களை இந்த வாரமும் பார்க்கலாம்
'தரிசனம்' படத்தில் ' இது மாலை நேரத்து மயக்கம்...' என்ற பாடலை முதலில் எல்.ஆர். ஈஸ்வரி தான் ஆரம்பித்து வைப்பார்.
இளமை துள்ளும் குரலில் அவருக்கே இயல்பான நளினத்துடன் எல்.ஆர்.ஈஸ்வரி அந்தப் பாடலின் பல்லவியை முழுதாகப் பாடி முடித்ததும் -
டி.எம்.எஸ் ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டே பாடலில் தமது பங்கை ஆரம்பிப்பார்.
அவர் பாடத் துவங்குவதற்கு முன்பாக அந்தச் சிரிப்பே ரசிக நெஞ்சங்களை சிலிர்க்க வைக்கும்.
ஆதாவது ' இந்த உலகத்தில் எதுவுமே நிலையானது இல்லை. எல்லாமே மாயை ' என்று சொல்லிக் கொண்டே ஒரு பட்டினத்தார் சிரித்தால் அல்லது ஒரு புத்தர் சிரித்தால் எப்படி இருக்குமோ!.... அந்த அர்த்தத்தை தமது சலிப்பும் , கிண்டலும் கலந்த அந்த சிரிப்பொலியால் சிறைப்பிடித்துக் கொண்டு வந்து நமது செவிகளின் முன் கொண்டவந்து நிறுத்துவார் டி.எம்.எஸ்.
(இதே போல ஒரு அர்த்தமும் , ஆழமும் பொதிந்த சிரிப்பொலியை வி.தட்சிணாமூர்த்தியின் இசையில் உருவான ' தேவி ' படத்தில் இடம்பெற ' அன்னையின் மடியில் துவங்கிய வாழ்க்கை.. மண்ணின் மடியில் முடிகிறது... ' என்ற பாடலின் பல்லவியில் முதல் இரண்டு வரிகளைப் பாடியதும் வெகு யதார்த்தமாக ஆனால் சிந்¾னையைத் தூண்டுகின்ற விதத்தில் அற்புதமாக வெளிப்படுத்துவார் டி.எம்.எஸ்.)
மெல்லிசை மன்னரின் இன்னிசையில் ' குமரிக் கோட்டம்' படத்தில் ஒரு பாடல்.
' நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவதை சொன்னாள் ' என்ற பாடலை கிட்டத்தட்ட பாதிப்பாடல் வரை எல்.ஆர்.ஈஸ்வரி பாடிவிடுவார்.
எல்.ஆர்.ஈஸ்வரியின் இளமை ஊஞ்சலாடும் குரலை ரசித்துக் கொண்டே 'எப்போ வருவாரோ' என்று டி.எம்.எஸ்.…இன் வருகையை எதிர்பார்த்து ஆவலோடு காத்துக் கொண்டிருப்போம்.
எல்.ஆர்.ஈஸ்வரி பலல்வியையும் , சரணத்தையும் பாடி முடித்ததும் அசத்தலான ஒரு பின்னணி ஒலிக்கும் .
அந்த இசையைப் பின்னுக்கு தள்ளிக் கொண்டே ' நான் தொடர்ந்து போக... என்னை மான் தொடர்ந்ததென்ன..?' என்று துள்ளிக் குதித்துக் கொண்டே டி.எம்.எஸ் ENTER ஆகும் இடம் அருமை ! அருமை! அபாரம்!!
-யாழ் சுதாகர்
---- ---- -----
'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....
மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....
yazhsudhakar@gmail.com
என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.