Thursday, May 25, 2006

தற்கொலையைத் தடுத்து நிறுத்திய பி.பி.எஸ்ஸின் பாடல்...




'மென்மைக்குரல் மன்னர்' பி.பி.சீனிவாஸ் அவர்கள்
முதன்முதலாகப் பாடிய படம் 'மிஸ்டர் சம்பத்' என்ற தெலுங்குப் படம்.

பிரபல வீணை வித்வான் ஈமனி சங்கர சாஸ்திரி¸ இசை வார்ப்பில் உருவான படம்.

தமிழில் இவர் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?

'பிரேம பாசம்'படத்தில் இடம் பெற்ற 'அவனல்லால் புவியில் ஓர் அணுவும் அசையாது '.

தமிழில் இவருக்கு முதல் திருப்பு முனை கொடுத்தபடம்
'அடுத்தவீட்டுப் பெண்'.

ஆதி நாராயண ராவின் அமுத இசையில் மலர்ந்த இந்தப் படத்தில் இவர்பாடிய 'கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே' ,வாடாத புஷ்பமே'ஆகிய பாடல்கள் தமிழ் ரசிக நெஞ்சங்களில் பெரும் வரவேற்பைப்பெற்றுத் தந்தன.

'கவியரசர்'கண்ணதாசன் எழுதி இவர் பாடிய பாடல்கள் எல்லாமே இவருக்குப்
பிடித்த பாடல்கள் தான் என்றாலும்...

அவற்றில் இவர் அடிக் கோடிட்டுக் காட்டி ஆனந்தப் படும் பாடல்கள் இரண்டு.

1.காலங்களில் அவள் வசந்தம். [பாவ மன்னிப்பு ]

2. மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப்பட வேñடும் [கொடி மலர்]

பி.பி.எஸ் அவர்களை ஒரு முறை யான் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவரது இசை வாழ்வில் அவரை மிகவும் நெகிழ வைத்த ஒரு சம்பவம் பற்றிக் கூறும்படி வேண்டினேன்.

அவர் சொன்னார்.

கேரளாவைச் சேர்ந்தவன் அந்த இளைஞன்.

அவன் தொட்டதெல்லாம் தோல்வியில் முடிந்தது.

ஏமாற்றங்களும் ,அவமானங்களுமே அவன் வாழ்க்கையில் அன்றாட வரவுகள்.

கனவுகள் எல்லாமே கானல் நீராக.....

வாழ்க்கையின் நிஜங்களும், யதார்த்தமும் அவனைப் பயமுறுத்த...

தற்கொலை என்றவிபரீத முடிவுக்கு அவன் தள்ளப்படுகிறான்.

அந்த சூழ்நிலையில் எதிர் பாராத விதமாக வானொலியில் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தப்பாடலை அவன் கேட்க நேரிடுகிறது.

அந்தப் பாடல் அவன் உள்ளத்தில் ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது.

மூன்று நிமிடõ மட்டுமே ஒலித்த அந்தப்பாடல் மின்னல் வேகத்தில் அவனுக்குள் ஏராளமான மாறுதல்களை நிகழ்த்துகிறது!

குழப்பங்களைக் குலைத்து ,கலக்கங்களைக் கலைத்து,

தெளிந்த நீரோடை போல அவன் மனதை மாற்றுகிறது.

எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் சாதனைகளின் சாலைகள் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற தெளிவும்.... வாழ்ந்தேஆக வேண்டும் என்ற வைராக்கியமும் அவனுள் உருவாகிறது.

'ஆயிஷா' என்ற மலையாளப் படத்தில் யான் பாடிய....

'யாத்ரக்காரா போகுக போகுக'என்ற பாடல் தான் அந்த இளைஞனுக்கு மறு வாழ்வு கொடுத்த பாடல் என்று அறிந்தேன்.

அந்தப் பாடலில் வரும்....

'ஒரு வழி அடைக்கும் போது...

ஒன்பதுவழி திறக்கும்' என்ற வரி தான்

திக்கற்றுப் போய் நின்ற தன் கைப்பிடித்து வந்து

நம்பிக்கையின்கரை சேர்த்தது என்று அந்த இளைஞன் நன்றிக்கடிதத்தில் எழுதியதை நான் படித்த போது......

இசைப் பணி செய்யுமாறு என்னை அனுப்பி வைத்த இறைவனுக்கு கண்கள் பனிக்க நன்றி சொன்னேன் என்றார் பி.பி.எஸ் உணர்வு பொங்க.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

2 comments:

குமரன் (Kumaran) said...

மயக்கமா? கலக்கமா? பாடலில் வரும் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு என்ற வரிகளைப் பற்றி இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாகப் படித்திருக்கிறேன். ஆனால் மலையாளப் பாடலைப் பற்றிப் படிப்பது இப்போது தான். மிக்க நன்றி யாழ் சுதாகர்.

Anonymous said...

பின்னணிப் பாடகர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் PBS. அவரைப் பற்றிய இந்தப் பதிவு அருமை.