Thursday, May 25, 2006

டி.எம்.எஸ்...எம்.எஸ்.வி கூட்டணியின் அபார ஆற்றல்...





நடிகர் திலகம் பாடுவதாக வரும் அந்தப் பாடலை வழக்கம் போல

டி.எம் எஸ்ஸைப் பாட வைக்காமல்

வேறொரு பாடகரைப் பாட வைத்தார்
மெல்லிசை மன்னர் எம். எஸ்.வி.

மிகவும் உணர்வு பூர்வமான ஒரு சோகப்பாடல் அது.

ஆனாலும் அந்தப் பாடகர் மிகவும் சிறப்பாகப் பாடியதால் மெல்லிசைமன்னருக்கு திருப்தி.

சிவாஜியும் அந்த குரலை ஏற்றுக் கொன்டார்.

சிவாஜி வாயசைத்து நடிக்க அந்தப் பாடல் காட்சி படமானது.

ஆனால் அந்தப்பாடல் காட்சியை திரையில் போட்டுப் பார்த்த போது பாடகரின்குரல்,சிவாஜியின் நடிப்பு எல்லாமே நன்றாக இருந்தும் ,

ஏதோஒன்று குறைவது போலத் தோன்றியது.

மெல்லிசைமன்னருக்கும் அந்தக் காட்சி போட்டுக் காட்டப்பட்டது.

ஆமாம் சிவாஜியின் செழுமையான நடிப்போடு அந்தக்குரல் ஒட்டவில்லை என்றார்எம்.எஸ்.வி.

பாடல் காட்சியை படமாக்கி முடித்து விட்டோமே இனி என்ன செய்வது ?

என்று எல்லோருக்குமே குழப்பம்.

அந்தக் காலத்தில் இன்றைக்கு இருப்பதைப் போன்ற

அதி நவீனதொழில் நுட்பவசதிகள் இல்லை.

எனினும்,எம்.எஸ்.வி. யோசித்துப் பார்த்தார்.


திடீரென ஒரு எண்ணம் அவர் மூளையில் மின்னலிட்டது.

உடனே டி.எம்.எஸ் அவர்களை ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்தார்.

அந்தப்பாடலுக்கு சிவாஜி நடித்த காட்சியை திரையில் ஓட விடும்படி சொன்னார்.

அதில் சிவாஜியின் வாய் அசைவைப் பார்த்து...

அதற்கு ஏற்ற படி அந்தப்பாடலைப் பாடும்படி டி.எம்.எஸ்ஸிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மிகவும் சவாலான ஒரு வேலை தான்.

ஆனால் டி.எம்.எஸ், சிவாஜியின் வாய் அசைவையும் முக பாவங்களையும் நன்கு கவனித்துக் கொண்டே அந்தப்பாடலைப் பாடிமுடித்தார்.

மெல்லிசைமன்னர் ஓடி வந்து டி.எம்.எஸ்ஸை

கை கொடுத்துப் பாராட்டினார்.

இந்தப்பாடல் எம்.எஸ்.வி, டி.எம்.எஸ் இருவருக்கும் ஒருசவாலான அனுபவம் மட்டுமல்ல.... வித்தியாசமான அனுபவமும்கூட.

வழக்கமாக டி.எம்.எஸ் பாடிய பாடலைக் கேட்டு அந்தப் பாடலுக்கு ஏற்ப சிவாஜி வாய் அசைப்பார்.

ஆனால் இந்தப் பாடலைப்பொறுத்தவரை சிவாஜியின் வாய் அசைவைப் பார்த்து அதற்கு ஏற்ப டி.எம்.எஸ் பாடினார்.

டிஜிட்டல்,ஸ்டீரியோ, நவீன டிராக் சிஸ்டம் போன்ற

அதி நவீனவசதிகள் இல்லாத எழுபதுகளில்

கருவிகளை நம்பாமல்

திறமையையும் தன்னம்பிக்கையையும் மட்டும் நம்பி

இந்த சாதனையைப் படைத்த இருவரும்

தமிழ்த் திரை இசையின் அதிசயங்கள்!

இந்த இசை அதிசயங்களின் கூட்டணியில் பதிவான

அந்தய பாடல் எது?என்று கேட்கின்றீர்களா?

'கௌரவம்' படத்தில் இடம் பெற்ற

'பாலூட்டி வளர்த்த கிளி'என்ற பாடல் தான் அது.

------- ------ -------
'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

சிவாஜிக்காக முதன் முதலில் எஸ்.பி.பி பாட வந்த போது...








நடிகர் திலகத்திற்காக முதன் முதலாக

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்த போது ...

எனக்காக நீங்கள் குரலை மாற்றிப் பாட வேண்டாம்..

உங்கள் பாணியிலேயே பாடுங்கள்...

நடிக்கும் போது உங்கள் குரலுக்கு இசைவாக எனது நடிப்பை அமைத்துக்கொள்கிறேன் என்றாராம் சிவாஜி.

சிவாஜி சொன்னபடி எஸ்.பி.பி. தமக்கே இயல்பான 'நளினம் கொஞ்சும்' நந்தவனக் குரலில் அந்தப் பாடலை மிக சுதந்திர உணர்வோடு பாடினார்.

பாடல் பிரமாதமாக பதிவானது.

ஆனால் பாடலைக் கேட்ட போது,

டி.எம்.எஸ்ஸின் குரலைப் போல இந்த புதிய குரல்... அதுவும் மென்மையான குரல் நடிகர் திலகத்தின் நடிப்போடு இசையுமா?

என்று சிலர் சந்தேகப் படவும் செய்தனர்.

ஆனால் அந்தப் பாடல் காட்சி படமாக்கப் பட்ட போது...

எஸ்.பி.பியின் நளினமான குரலுக்கு ஏற்ப தமது நடையையும் பாவனைகளையும் அசைவுகளையும் குழையக் குழைய வெளிப்படுத்தினார் நடிகர் திலகம்.

சந்தேகப் பட்டவர்கள் பிரமித்துப் போனார்கள்.

பிரமிப்பின் மறு பெயர் தானே நடிகர் திலகம் !

அந்தப் பாடல் ...'சுமதி என் சுந்தரி' படத்தில் மெல்லிசை மன்னரின் இசை வார்ப்பில் மலர்ந்த' பொட்டு வைத்த முகமோ'.

காலப் புயலில் கலைந்து போகாத பாட்டு தீபங்களில் இன்றும் இளமை ஊஞ்சலாடும் இந்தப் பாடலும்...
பாடல் காட்சியும் ஒரு வசந்த வரலாறு.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

பாடல்களில் எதிர்மறை வரிகளைத் தவிர்த்த எம்.ஜி.ஆர்...






'வானம்பாடி' படத்தில்..டி.எம்.எஸ்ஸின் வேண்டுகோளுக்கு இணங்க

தனது பாடல் வரியில் கண்ணதாசன் திருத்தம் செய்ததைப் போல...

'சங்கே முழங்கு' படப் பாடலிலும்

எம்.ஜி ஆரின் திருப்திக்காக ஒரு திருத்தம் செய்து கொடுத்தார்.

'நாலு பேருக்கு நன்றி...அந்த நாலு பேருக்கு நன்றி...

தாயில்லாத அனாதைக்கெல்லாம்

தோள் கொடுத்து தூக்கிச் செல்லும்

அந்த நாலு பேருக்கு நன்றி..'

என்று கவியரசர் எழுதிய பாடலில் வரும்

கடைசி சரணத்தில்....

'வாழும் போது வருவோர்க்கெல்லாம்

வார்த்தையாலே நன்றி சொல்வோம்.

போகும் போது வார்த்தை இல்லை...

போகு முன்னே சொல்லி வைப்போம்...'

என்று முடித்திருந்தார்.


'போகும் முன்னே சொல்லி வைப்போம்..'என்ற வார்த்தையை கொஞ்சம் மாற்றலாமே... என்று எம்.ஜி.ஆர்..அபிப்பிராயப்பட்டார்.

உடனே கவியரசர்..அந்த சரணத்தை..சிறு மாற்றங்களுடன்...'

'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்..

வார்த்தை இன்றிப் போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்...'

என்று எழுதிக் கொடுக்க...மக்கள் திலகத்தின் முகத்தில்...பரம திருப்தி.

தனது பாடல்களில்...வலிமையான எதிர் மறை வார்த்தைகள்...

அல்லது அறச் சொற்கள் வருவதைஎம்.ஜி.ஆர் தவிர்ப்பது வழக்கம் என்பதற்கு...இந்த சம்பவமும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

தற்கொலையைத் தடுத்து நிறுத்திய பி.பி.எஸ்ஸின் பாடல்...




'மென்மைக்குரல் மன்னர்' பி.பி.சீனிவாஸ் அவர்கள்
முதன்முதலாகப் பாடிய படம் 'மிஸ்டர் சம்பத்' என்ற தெலுங்குப் படம்.

பிரபல வீணை வித்வான் ஈமனி சங்கர சாஸ்திரி¸ இசை வார்ப்பில் உருவான படம்.

தமிழில் இவர் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?

'பிரேம பாசம்'படத்தில் இடம் பெற்ற 'அவனல்லால் புவியில் ஓர் அணுவும் அசையாது '.

தமிழில் இவருக்கு முதல் திருப்பு முனை கொடுத்தபடம்
'அடுத்தவீட்டுப் பெண்'.

ஆதி நாராயண ராவின் அமுத இசையில் மலர்ந்த இந்தப் படத்தில் இவர்பாடிய 'கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே' ,வாடாத புஷ்பமே'ஆகிய பாடல்கள் தமிழ் ரசிக நெஞ்சங்களில் பெரும் வரவேற்பைப்பெற்றுத் தந்தன.

'கவியரசர்'கண்ணதாசன் எழுதி இவர் பாடிய பாடல்கள் எல்லாமே இவருக்குப்
பிடித்த பாடல்கள் தான் என்றாலும்...

அவற்றில் இவர் அடிக் கோடிட்டுக் காட்டி ஆனந்தப் படும் பாடல்கள் இரண்டு.

1.காலங்களில் அவள் வசந்தம். [பாவ மன்னிப்பு ]

2. மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப்பட வேñடும் [கொடி மலர்]

பி.பி.எஸ் அவர்களை ஒரு முறை யான் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவரது இசை வாழ்வில் அவரை மிகவும் நெகிழ வைத்த ஒரு சம்பவம் பற்றிக் கூறும்படி வேண்டினேன்.

அவர் சொன்னார்.

கேரளாவைச் சேர்ந்தவன் அந்த இளைஞன்.

அவன் தொட்டதெல்லாம் தோல்வியில் முடிந்தது.

ஏமாற்றங்களும் ,அவமானங்களுமே அவன் வாழ்க்கையில் அன்றாட வரவுகள்.

கனவுகள் எல்லாமே கானல் நீராக.....

வாழ்க்கையின் நிஜங்களும், யதார்த்தமும் அவனைப் பயமுறுத்த...

தற்கொலை என்றவிபரீத முடிவுக்கு அவன் தள்ளப்படுகிறான்.

அந்த சூழ்நிலையில் எதிர் பாராத விதமாக வானொலியில் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தப்பாடலை அவன் கேட்க நேரிடுகிறது.

அந்தப் பாடல் அவன் உள்ளத்தில் ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது.

மூன்று நிமிடõ மட்டுமே ஒலித்த அந்தப்பாடல் மின்னல் வேகத்தில் அவனுக்குள் ஏராளமான மாறுதல்களை நிகழ்த்துகிறது!

குழப்பங்களைக் குலைத்து ,கலக்கங்களைக் கலைத்து,

தெளிந்த நீரோடை போல அவன் மனதை மாற்றுகிறது.

எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் சாதனைகளின் சாலைகள் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற தெளிவும்.... வாழ்ந்தேஆக வேண்டும் என்ற வைராக்கியமும் அவனுள் உருவாகிறது.

'ஆயிஷா' என்ற மலையாளப் படத்தில் யான் பாடிய....

'யாத்ரக்காரா போகுக போகுக'என்ற பாடல் தான் அந்த இளைஞனுக்கு மறு வாழ்வு கொடுத்த பாடல் என்று அறிந்தேன்.

அந்தப் பாடலில் வரும்....

'ஒரு வழி அடைக்கும் போது...

ஒன்பதுவழி திறக்கும்' என்ற வரி தான்

திக்கற்றுப் போய் நின்ற தன் கைப்பிடித்து வந்து

நம்பிக்கையின்கரை சேர்த்தது என்று அந்த இளைஞன் நன்றிக்கடிதத்தில் எழுதியதை நான் படித்த போது......

இசைப் பணி செய்யுமாறு என்னை அனுப்பி வைத்த இறைவனுக்கு கண்கள் பனிக்க நன்றி சொன்னேன் என்றார் பி.பி.எஸ் உணர்வு பொங்க.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

கண்ணதாசனின் பெருந்தன்மை.....டி.எம்.எஸ்





'வானம்பாடி' படத்தில்...ஒரு பாடல்...

'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்...
அவன் காதலித்தே வேதனையில்
சாக வேண்டும்...'

என்று கவியரசர் கண்ணதாசன் எழுத...'திரை இசைத் திலகம் 'கே.வி.மகாதேவன் இசையமைக்கிறார்.

அந்தப் பாடலை...டி.எம்.எஸ் அவர்களிடம்...கே.வி.மகாதேவனின் உதவியாளர் பாடிக் காட்டுகிறார்.

பாடலைக் கேட்டுப் பார்த்த டி.எம்.எஸ்...

'இந்தப் பாடலின் பல்லவியில் கடவுளை சாக வேண்டும் என்று வரும் வரியை நான் எப்படிப் பாடுவது?

மனிதனுக்குத் தான் மரணம் உண்டு...

கடவுள் சாகா வரம் பெற்றவர்...

எனவே அவரை சாக வேண்டும் என்று வரும் வரிகளை...

கடவுளை சதா புகழ்ந்து பாடிய என் வாயினாலேயே பாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார்.

டி.எம்.எஸ் இப்படிச் சொல்லும் போது...கவியரசர் கண்ணதாசனும் அருகில் இருந்தார்.

'கடவுளை சாடுவதற்காக அப்படி எழுதவில்லை.

கதாபாத்திரம்...காதல் தோல்வியில் அப்படி பாடுவதாக...கதையின் போக்கை அனுசரித்து அப்படி எழுதினேன்.'.என்று..கவிஞர், டி.எம்.எஸ்ஸிடம் சமாதானம் சொன்னார்.

உடனே டி.எம்.எஸ்..கதாநாயகன்...முட்டாள் தனமாக காதலித்து..பின்பு அது..கை கூடாமல் போகும் போது..அந்தக் குற்றத்தை...அறிவார்ந்த பொருளான கடவுள் மீது சாட்டுவதற்கு எந்த நியாயமும் இல்லை.

எனவே...கடவுள்..சாக வேண்டும் என்ற வரியை மட்டும் நான் பாட மாட்டேன்...என்றார் மீண்டும் பிடிவாதமாக.

கண்ணதாசன் மட்டுமல்ல..கே.வி.மகா தேவனும்...எவ்வளவோ சமாதானம் செய்தும்...டி.எம்.எஸ் தனது முடிவில் தீர்மானமாக இருந்தார்.

உடனே கண்ணதாசன்...'அவ்வளவு தானே முருக பக்தரே...சாக வேண்டும் என்ற வரியை...'வாட வேñடும்' என்று மாற்றி எழுதித் தருகிறேன்...' என்று சொல்லி...அதை வாங்கி திருத்தம் செய்து கொடுத்தார்.

கவியரசராக அவர் இருந்த போதிலும்...சக கலைஞனின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற உணர்வுடன் கண்ணதாசன் அன்று பெருந்தன்மையாக நடந்து கொண்ட விதம்...

இன்றும் என்னை வியக்க வைக்கிறது...வணங்க வைக்கிறது என்கிறார் டி.எம்.எஸ்.

------ ------ -------

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.