Tuesday, December 12, 2006

பூர்வஜென்மத்தில் கிறிஸ்தவராக பிறந்திருப்பேன் - டி.எம்.எஸ்





நடிகர் திலகம் நடித்த 'ஞான ஒளி' படத்தில் இடம்பெற்ற...

தேவனே என்னைப் பாருங்கள் -என்
பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
என்ற பாடலை மறக்க முடியுமா?

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த இந்த பாடலின் நடுவே..

" ஓ...மைலார்ட்...பார்டன் மீ....

உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய்விட்டன...

இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே..."

என்று உணர்வுபூர்வமாக வசனங்கள் இடம் பெற்றிருந்ததன.

டி.எம்.எஸ் பாடிய அந்தப் பாடலில் வரும் மேற்படி வசனங்களை மட்டும்... நடிகர் திலகத்தையே பேசும்படி எம்.எஸ்.வி வேண்டுகேள் விடுத்தார்.

இந்த வசனங்கள்... பாடலில் எந்த இடத்தில் வருகின்றன என்பதை பாடிக்காட்டுங்கள்" என்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிவாஜி கேட்க உடனே எம்.எஸ்.வி...

" ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கின்றோம்..
நீங்கள் அறிவீர் ...மன்னித்தருள்வீர்"
என்று பாடிக் காட்டி ....

இந்த இடத்தில் தான் தாங்கள்....'O My Lord Pardone Me' என்று ஆரம்பமாகும் வசனத்தை பேசவேண்டும் என்றார்.

இவ்வளவு உச்ச ஸ்தாயியில் கொண்டு போய் பாடலை நிறுத்தி இருக்கிறீர்களே.... அதற்கு ஈடுகொடுத்து என்னால் பேச முடியாது என்றே நினைக்கிறேண். வேறு பொருத்தமானவரை அழைத்து அந்த வசனங்களைப் பேச வையுங்கள் என்றார் நடிகர் திலகம் தமக்கே இயல்பான வெளிப்படைப் பண்புடன்'

வயலின் வாத்தியக் கலைஞரும் , தமது உதவியாளருமான ஜோசப் கிருஷ்ணாவை அழைத்து அந்த வசனங்களைப் பேச வைத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஆனால் அவரது குரல் அந்தப் பாடலின் வீச்சுக்குப் பொருத்தி வரவில்லை.

'பல்குரல் வித்தகர்' சதன் என்பவரைக் கூப்பிட்டு ('அவள் ஒரு தொடர்கதை' படத்தில் எஸ்.பி.பி. பாடிய கடவுள் அமைத்து வைத்த மேடை' பாடலில் பல குரல்களில் அமர்க்களப்படுத்தியவர் இந்த 'சதன்') இதே வசனத்தைப் பேச வைத்தார் எம்.எஸ்.வி.

ஆனால் , அதுவும் பாடலின் போக்கோடு ஒன்றிப்போகாமல் தனித்து நின்றது.

நடப்பதை எல்லாம் தூரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் கிருஷ்ணன் - பஞ்சு, எம்.எஸ்.வியை அழைத்து...

பாடலைப் பாடிய டி.எம்.எஸ்ஸையே அந்த வசனங்களையும் பேச வைத்துப் பார்க்கலாமே என்றார்.

எம்.எஸ்.வி.... டி.எம்.எஸ்ஸிடம் அந்த வசனங்களைக் கொடுத்துப் பேசுமாறு வேண்டினார்.

டி.எம்.எஸ் உடனே நடிகர் திலகத்தின் அருகில் சென்றார்.

அந்த வசனங்களை நடிகர் திலகத்திடம் கொடுத்தார்.

"உங்கள் சிம்மக்குரலில்...அந்த வசனங்களை ஒரு தடவை எனக்குப் பேசிக்காட்டுங்கள் அய்யா" என்றார்.

நடிகர் திலகம் , அந்த வசனங்களை தமது பாணியில் டி.எம்.எஸ்ஸிடம் பேசிக்காட்டினார்.

அந்த வசனங்களைப் பேசிய போது, நடிகர் திலகத்தின் குரலில் இருந்த பாவங்களையும் ஏற்ற இறக்கங்களையும்,உணர்வுக் குமிழிகளையும் , உன்னதங்களையும் அப்படியே தமது மனதில் உள் வாங்கிக் கொண்டார் டி.எம்.எஸ்.

"நான் தயார்... ஒலிப்பதிவை ஆரம்பிக்கலாமா?" என்று டி.எம்.எஸ் சொன்னதும் ...எம்.எஸ்.வி கையசைத்தார்.

ஏக்கமும் விரக்தியும் தேவ விசுவாசமும் கொண்ட ஒரு பக்தனின் 'ஞானத் தேடல்' விளங்கும் விதமாக... உணர்ச்சிப் பிழம்பாக மாறி அந்த வசனத்தைப் பேசினார் டி.எம்.எஸ்

'அருமை டி.எம்.எஸ் அற்புதம் ' என்று நடிகர் திலகம் பாராட்டினார்.

"யான் இந்தப் பாடலைப் பாடி 30 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. ஆனால் இன்றைக்கும் என்னை சந்திக்கின்ற கிறிஸ்தவ அன்பர்கள்,இந்தப் பாடலையும் , அதில் நான் பேசிய வசனங்களையும் சொல்லிச் சொல்லி... என்னைப் பாராட்டும் போது சிலிர்ப்பாக இருக்கும் எனக்கு!...."

வழிகாட்டுவதற்கு...
ஆயன் இல்லாத ஆடு ஒன்று
திக்கற்று, பரிதவித்து
ஆண்டவரைக் கூவி அழைக்கும் பரவசத்தை
உங்கள் குரலிலேயே நாம் கண்டு நெகிழ்ந்தோம்....
மெழுகாக உருகினோம்.."

என்றெல்லாம் அவர்கள் பாராட்டுவார்கள்.

இதே போல 'அன்னை வேளாங்கண்ணி' படத்தில் யான் பாடிய
" தேவமைந்தன் போகின்றான்.." என்ற பாடலையும் அவரகள் பரவசத்துடன் பாராட்டிப் பேசுவார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது... ' விட்டகுறை தொட்டகுறை என்பார்களே.. அதேபோல பூர்வஜென்மத்தில் யான் ஒரு கிறிஸ்துவனாகப் பிறந்திருப்பேன் போலும், அந்த தேவ பந்தம் தான் இந்தப் பாடல்களில் சத்தியமும் ஒளியுமாக மலர்ந்திருக்கிறது என்று யான் நினைப்பதுண்டு என்றார் டி.எம்.எஸ்.

-யாழ் சுதாகர்


[வாசகர்கள் அனைவருக்கும்.. எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ்,
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். - யாழ் சுதாகர் ]

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

Friday, November 24, 2006

டி.எம்.எஸ்ஸூக்காக எம்.ஜி.ஆரிடம் வாதாடிய தேவர்.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் ,'பாடகர் திலகம்' டி.எம்.எஸ்ஸூக்கும் இடையே எதிர்பாராத சிறிய 'விரிசல்'ஏற்பட்டிருந்த சமயம் அது.

அப்போது சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் தயாரித்த 'நல்ல நேரம்' படத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்தார்.

'நல்ல நேரம்' படத்தில் டி.எம்.எஸ்ஸூக்குப் பதிலாக எல்லாப் பாடல்களையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையே பாட வையுங்கள்.

ஒரு மாறுதலுக்காகத்தான் இந்த யோசனை ' என்று தேவரிடம் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தார் எம்.ஜி.ஆர்.

தேவருக்கு இது அதிர்ச்சியைத் தந்தது.

டி.எம்.எஸ். ஏன் என் படத்தில் பாடக்கூடாது ?
அவர் செய்த பாவம்தான் என்ன?
அவர் ஏதாவது தவறு செய்திருந்தால் சொல்லுங்கள். இரண்டு தட்டு தட்டிக் கொண்டுவந்து உங்கள் முன்னாலே கொண்டுவந்து அவரை நிறுத்துகிறேன்.

ஆனால் டி.எம்.எஸ்ஸை நல்ல நேரத்தில் பாட வைக்கக் கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால்...' நல்ல நேரம்' படத்தை எடுப்பதையே நான் நிறுத்திக் கொள்ளுகிறேன்..." என்றார் படபடப்பாக தேவர்.

அதைக் கேட்டதும் அதிர்ந்து போன எம்.ஜி.ஆர்....பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க அண்ணே ...உங்க விருப்பபடியே டி.எம்.எஸ். பாடட்டும்" என்றார் சமாதானமாக.

இந்த சம்பவம் பற்றி தேவர் , டி.எம்.எஸ்ஸிடம் பேசிக் கொண்டிருக்கும் போது பழைய கால சம்பவங்களை நினைவு கூர்ந்தாராம்.

ஜூபிடர் பிக்சர்ஸ் 'கிருஷ்ண விஜயம்' படத்தில் நீ பாடிக்கொண்டிருந்த சமயம்... அந்தப் படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன்.

இருவரின் கலைப் பயணமும் கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்திலேயே துவங்கியது.

அதேபோல , 'சுதர்சன்' என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நீயும் நானும் ஒன்றாக நடித்தோமே .. ஞாபகம் இருக்கிறதா?

இசையிலும் , வாழ்விலும் நீ முருகனை நம்பி வந்தாய்.

கலையுலகிலும் , வாழ்க்கையிலும் நானும் அதே முருகனையே நம்பி வந்தேன்.

இருவரையும் அவனே உயர வைத்தான்.

ஒரு முருக பக்தனான டி.எம்.எஸ்ஸூக்கு எந்த குறையும் வராமல் பார்த்துக் கொள்வது , இன்னொரு முருக பக்தனான எனது தார்மீக கடமை அல்லவா?

அதனால் தான் உனக்காக எம்.ஜி.ஆரிடம் பரிந்து பேசினேன்.."என்றார் சாண்டோ M.M.A.சின்னப்பா தேவர்.

தேவர் உயிரோடு இருக்கும் வரை தாம் தயாரிக்கும் ஒவ்வொரு படத்திலும் டி.எம்.எஸ்ஸைப் பாட வைத்தார்.

இளைய தலைமுறை நடிகர்கள் கமல். ரஜினி. சிவக்குமார் ஆகியோரை வைத்து ' தாயில்லாமல் நானில்லை ' 'தாய் மீது சத்தியம் ' 'ஆட்டுக்கார அலமேலு' வெள்ளிக்கிழமை விரதம்' என்றெல்லாம் படங்களை எடுத்த போதெல்லாம் கூட அவர்களுக்காகவும் டி.எம்.எஸ்ஸை பாடவைத்தார்.

முருகனையே பரிபூரண கதியாக எண்ணி வாழ்ந்த தேவர்... முருகப் பெருமானுக்கு உரிய நாளாகிய ஷஷ்டியன்று காலமானார்.

நன்றி மறக்காத டி.எம்.எஸ் , தேவரின் பூதவுடல் அருகே அமர்ந்து ஒரு மணி நேரமாக முருக பக்திப் பாடல்களை கண்ணீர் மல்கப் பாடி தேவருக்கு மானசீகமாக தமது நன்றி மலர்களைக் காணிக்கையாக்கினார்.
- யாழ் சுதாகர்
எம்.ஜி.ஆர் புகைப்படங்கள்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த பாடல் காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்டவசீகரமான புகைப் படங்களின் தொகுப்பைப் பார்த்து ரசிக்க இங்கே சொடுக்குங்கள்.
----- ----- ----
'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.
YAZHSUTHAKAR,YAZH SUTHAKAR,YAZHSUTHAHAR, YAZH SUTHAHAR,
YAZHSUDHAKAR,YAZH SUDHAKAR,YAZH SUDHAGAR,YARL SUTHAHAR,YARL SUTHAKAR,YARL SUDHAKAR
TMS SONGS,T.M.SOUNTHARARAJAN SONGS,T.M.SOUNDARARAJAN SONGS,MGR SONGS,SIVAJI SONGS,KANNATHASAN SONGS,KANNADASAN SONGS,SPB TAMIL SONGS,K.J.JESUTHAS TAMIL SONGS,S.JANAKI TAMIL SONGS,S.JANAKI SONGS,TAMIL OLD SONGS,VANI JEYARAM SONGS,VAANI JEYARAM SONGS,KAMAL SONGS

Thursday, September 14, 2006

தாமதமாக வந்து பெயரைத் தட்டிச் செல்லும் டி.எம்.எஸ்...



இன்னொரு பாடகருடன் அல்லது பாடகியுடன் இணைந்து பாடும் பாடல்களில் குயில் குதூகலத்துடன் டி.எம்.எஸ். செய்யும் வித்தைகள் பற்றி சென்ற வாரங்களில் பார்த்தோம்.

இந்த வாரமும் இதே சுவாரஸ்யங்களை நினைவுபடுத்தும் சில பாடல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

விஜயபாஸ்கரின் இசையில் உருவான படம் 'கல்யாணமாம் கல்யாணம்'.

இந்தப் படத்தில் 'இளமை நாட்டிய சாலை ' என்ற பாடலை முதலில் எஸ்.ஜானகி அவர்கள் தான் பாட ஆரம்பிப்பார்.

பல்லவி முழுவதையும் அவர் பாடி சரணத்திலும் சில வரிகளைப் பாடிய பின்பு... எதிரொலியுடன் கூடிய ஒரு 'ஹம்மிங்' கொடுத்தபடி... 'ஆத்தங்கரையில் காத்திருந்தாள் பாமா' என்று சொல்லிக் கொண்டே மண் வாசனை கம கமக்க டி.எம்.எஸ், உள்ளே வரும் அழகே தனி.

ஆர். கோவர்த்தனம் அவர்களின் இசையில் வெளிவந்த படம் ' பட்டணத்தில் பூதம்'.

இந்தப் படத்தில் 'அந்த சிவகாமி மகனிடம் சேதி கேளுங்கள்' என்ற பாடலை பல்லவியில் ஆரம்பித்து பாதித்தூரம் வரை சுசீலா பாடி விடுவார்.

அவர் பாடி முடிந்ததும்...விஸ்தாரமான ஒரு 'எக்கோ' வுடன் -'ஹம்மிங் 'கொடுத்தபடி டி.எம்.எஸ். பாடலோடு வந்து இணைகின்ற அழகைப் பாராட்ட கைவசம் என்னிடம் வார்த்தைகள் இல்லை.

குடியிருந்த கோயில் 'படத்தின்' 'துள்ளுவதோ இளமை' பாடலை விட்டு விட்டீர்களே என்று கேட்கிறீர்களா?

எப்படி விட முடியும் ?

விடாமல் துரத்துகின்ற வசீகரப் பாடல்களில் இதுவும் ஒன்றாச்சே?...

எல்.ஆர்.ஈஸ்வரி , துள்ளல் நடைபோடும் துடிப்பான குரலில் பல்லவியைப் பாடி , சரணத்தையும் முடித்ததும் 'பா...பபபப்பா...' என்று போதையூட்டும் உற்சாகத்தைக் காற்றிலே ஊற்றிக் கொண்டே டி.எம்.எஸ். பறந்து வரும் அழகு ..பரவசம்!... அடடா!

'ராமு' படத்தில் ' கண்ணன் வந்தான்' பாடலை சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் ஆரம்பித்து சரணத்தையும் பாடி முடித்த பிறகு....
'கருணை என்னும் கண் திறந்து காக்க வேண்டும் ' என்று சொல்லிக் கொண்டே டி.எம்.எஸ். உள்ளே வருகின்ற போது .. அந்த ஆரம்ப நெகிழ்ச்சியில் ....பரவசத்தில் கல்மனசு கூட கற்பூரமாக உருகும்.

'ஒளிவிளக்கு' படத்தில் 'ருக்குமணியே பற பற பற...' என்று
எல்.ஆர்.ஈஸ்வரி ஆரம்பித்துவைப்பார்.

அவர் பாடிக் கொண்டிருக்கும் போதே...ப்ளீஸ் ஒன்ஸ் அகெய்ன்' என்று டி.எம்.எஸ் சொல்லுவார்.

அந்த ஒரு வார்த்தையே... அவரது கம்பீரமான வருகையை
கனத்த ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைக்கும்.

THE ONE AND ONLY TMS!


'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

Friday, August 11, 2006

பிந்தி வந்து ...முந்தி நிற்கும் டி.எம்.எஸ்...






இன்னொரு பாடகர் அல்லது பாடகியுடன் டி.எம்.எஸ் இணைந்து பாடும் பாடலை
முதலில் டி.எம்.எஸ் ஆரம்பிக்காமல் , மற்றவர் ஆரம்பிக்க
அதன் பின்பு டி.எம்.எஸ்ஸின் குரல் சற்றுத்தாமதமாக வரும்... . பாடல்களில் -

டி.எம்.எஸ். தமது அழுத்தமான முத்திரையைப் பதித்துக் கொண்டே உற்சாகமாக தாம் வந்துவிட்டோம் என்பதை குரல் குறிப்பால் உணர்த்தும் இடம் அருமை என்பதை சென்ற தொடரில் சில பாடல்களை உதாரணம் காட்டி வியந்திருந்தோம்.

அந்த வகையில் இன்னொரு பாடகருடன் டி.எம்.எஸ். பாடிய பாடல்களில் அவரது வருகையை ஆர்வத்துடிப்போடு எதிர்பார்க்க வைக்கும் இன்னும் சில பாடல்களை இந்த வாரமும் பார்க்கலாம்

'தரிசனம்' படத்தில் ' இது மாலை நேரத்து மயக்கம்...' என்ற பாடலை முதலில் எல்.ஆர். ஈஸ்வரி தான் ஆரம்பித்து வைப்பார்.

இளமை துள்ளும் குரலில் அவருக்கே இயல்பான நளினத்துடன் எல்.ஆர்.ஈஸ்வரி அந்தப் பாடலின் பல்லவியை முழுதாகப் பாடி முடித்ததும் -

டி.எம்.எஸ் ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டே பாடலில் தமது பங்கை ஆரம்பிப்பார்.

அவர் பாடத் துவங்குவதற்கு முன்பாக அந்தச் சிரிப்பே ரசிக நெஞ்சங்களை சிலிர்க்க வைக்கும்.

ஆதாவது ' இந்த உலகத்தில் எதுவுமே நிலையானது இல்லை. எல்லாமே மாயை ' என்று சொல்லிக் கொண்டே ஒரு பட்டினத்தார் சிரித்தால் அல்லது ஒரு புத்தர் சிரித்தால் எப்படி இருக்குமோ!.... அந்த அர்த்தத்தை தமது சலிப்பும் , கிண்டலும் கலந்த அந்த சிரிப்பொலியால் சிறைப்பிடித்துக் கொண்டு வந்து நமது செவிகளின் முன் கொண்டவந்து நிறுத்துவார் டி.எம்.எஸ்.

(இதே போல ஒரு அர்த்தமும் , ஆழமும் பொதிந்த சிரிப்பொலியை வி.தட்சிணாமூர்த்தியின் இசையில் உருவான ' தேவி ' படத்தில் இடம்பெற ' அன்னையின் மடியில் துவங்கிய வாழ்க்கை.. மண்ணின் மடியில் முடிகிறது... ' என்ற பாடலின் பல்லவியில் முதல் இரண்டு வரிகளைப் பாடியதும் வெகு யதார்த்தமாக ஆனால் சிந்¾னையைத் தூண்டுகின்ற விதத்தில் அற்புதமாக வெளிப்படுத்துவார் டி.எம்.எஸ்.)

மெல்லிசை மன்னரின் இன்னிசையில் ' குமரிக் கோட்டம்' படத்தில் ஒரு பாடல்.

' நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவதை சொன்னாள் ' என்ற பாடலை கிட்டத்தட்ட பாதிப்பாடல் வரை எல்.ஆர்.ஈஸ்வரி பாடிவிடுவார்.

எல்.ஆர்.ஈஸ்வரியின் இளமை ஊஞ்சலாடும் குரலை ரசித்துக் கொண்டே 'எப்போ வருவாரோ' என்று டி.எம்.எஸ்.…இன் வருகையை எதிர்பார்த்து ஆவலோடு காத்துக் கொண்டிருப்போம்.

எல்.ஆர்.ஈஸ்வரி பலல்வியையும் , சரணத்தையும் பாடி முடித்ததும் அசத்தலான ஒரு பின்னணி ஒலிக்கும் .

அந்த இசையைப் பின்னுக்கு தள்ளிக் கொண்டே ' நான் தொடர்ந்து போக... என்னை மான் தொடர்ந்ததென்ன..?' என்று துள்ளிக் குதித்துக் கொண்டே டி.எம்.எஸ் ENTER ஆகும் இடம் அருமை ! அருமை! அபாரம்!!

-யாழ் சுதாகர்


---- ---- -----


'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

Thursday, August 03, 2006

லேட்டாக வந்தாலும்....லேட்டஸ்டாக வரும் டி.எம்.எஸ்....




டி.எம்.எஸ் அவர்கள்.... இன்னொரு பாடகருடன் அல்லது பாடகியுடன் ஒரு பாடலைப் பாடும் போது.... இணைந்து பாடும் பாடகர் அல்லது பாடகி , பாடலின் பல்லவியை ஆரம்பித்த பிறகு டி.எம்.எஸ்.ஸின் குரல் ஒலிக்கின்ற பாடல்களை ரசிப்பது ஒரு ஆர்வம் கலந்த சுவையான அனுபவம்!

இப்படி அமையும் பாடல்களில் மற்றொரு பாடகர் அல்லது பாடகி பாடலை ஆரம்பித்து முடிக்கின்ற போது , டி.எம்.எஸ். பாடலைப் பாடத் துவங்குகிற இடம் கலகலப்பாக இருக்கும் அல்லது ஆர்ப்பாட்டமாக இருக்கும் .

'இதோ ... நான் வந்து விட்டேன்.....' என்பதை அவர் சொல்லாமல் சொல்லுவது போல அவரின் குரலில் தனித்துவமான ஒரு உற்சாகமும் அவருக்கே இயல்பான முத்திரைகளும் வந்து விழும்.

இந்த வகையில் அமைந்த சில பாடல்களை இப்போது பார்ப்போம்.

' இரு மலர்கள்' படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் கவிஞர் வாலி புனைந்த 'மன்னிக்க வேண்டுகிறேன்' என்ற பாடலை முதலில் பி.சுசீலா தான் ஆரம்பித்து வைப்பார்.

மிக இனிமை சொட்ட அந்தப்பாடலை அவர் ஆரம்பிப்பார்.

சுசீலா அவர்கள் 5 வது வரியைப் பாடி முடிந்ததும் ....
'தித்திக்கும் இதழ் உனக்கு ...என்றென்றும் அது எனக்கு' என்று டி.எம்.எஸ். பாட ஆரம்பிக்கும் போது ' தித்திக்கும் ' என்ற இடத்தில் தனியாக ஒரு 'குயில் முத்திரை பதித்து மொத்த காற்று மண்டலமுமே தித்திப்பதைப் போன்ற ஒரு பிரமையை ரசிக நெஞ்சங்களில் தோற்றுவிப்பார் .

இதே போல ' நாளை நமதே' படத்தில்.....' நாளை நமதே' என்ற பாடலை 'அன்பு மலர்களே நம்பி இருங்களே.. நாளை நமதே ' என்று எஸ்.பி.பி.தான் முதலில் துவங்கி வைப்பார்.

நளினம் கொஞ்சும் நந்தவனக் குரலில் எஸ்.பி.பி அவர்கள் அந்த பாடலை ஆரம்பிப்பார்.

அவர் பல்லவியைப் பாடி முடித்ததும் ஆர்ப்பாட்டமான ஒரு பின்னணி இசை ஒலிக்கும் .

அந்த இசையோடு கைகோர்த்துக் கொண்டே
'நாளை நமதே இந்த நாளை நமதே' என்று சொல்லிக் கொண்டே டி.எம்.எஸ் துள்ளி வரும் அழகு.... ரசிக நெஞ்சங்களை சிலிர்க்க வைக்கும் .

பரவசத்தில் மிதக்க வைக்கும் .

இவை போன்ற ஆர்வம் கலந்த ரசனைத் தன்மையைக் கிளர்ந்தெழச் செய்யும் மேலும் சில கீர்த்தி மிகு பாடல்களைப் பற்றி அடுத்த வாரமும் பார்ப்போம்...

------ ------ ------
'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.


Saturday, July 29, 2006





கே.எஸ்.ராஜாவின் குரலில் ஒலித்த வர்த்தக விளம்பரங்களைக் கேட்க இங்கே சொடுக்குங்கள். [ NEW]

பாகவதரின் தீவிரமான ரசிகர்...டி.எம்.எஸ்



'ஏழிசை அரசர்' டி.எம்.எஸ் அவர்கள், பாகவதரின் தீவிரமான ரசிகர்.

பாகவதரின் பாடல்களைக் கேட்டதால் தான் சினிமாவில் பாட வேண்டும் என்கிற ஆர்வமும் தாகமும் அவருக்கு அதிகமானதாம்.

அதனால் தானோ என்னவோ டி.எம்.எஸ்ஸின் துவக்க கால பாடல்களில், டி.எம்.எஸ்ஸின் குரலில் பாகவதரின் சாயலும் ,முத்திரைகளும் அதிகமாக இருக்கும்.

பாகவதரைப் போல பாடவேண்டும் என்பதற்காக டி.எம்.எஸ். அவரது பாடல்களை திரும்பத் திரும்ப உன்னிப்பாக கேட்டிருக்கிறார்.

'கடம்' மாதிரி வாய் சின்னதாக இருக்கும் மண் பானையை வாங்கி ,
அதற்குள் தமது வாயை வைத்துக் கொண்டு பலவித குரல்களை எழுப்பி... அதில் பாகவதர் வாய்ஸ் எந்த இடத்தில் வருகிறது என்பதை கண்டுபிடித்து, அந்தக்குரலை நாளும் பொழுதுமாக மண்பானைப் பயிற்சி மூலமாக உருவாக்கிக் கொண்டாராம்.
பாகவதர் ஸ்டைலுக்குப் பழக்கப்படுத்திக் கொண்டாராம்.

டி.எம்.எஸ். பின்னணிப் பாடகரக அறிமுகமாகி... இரண்டு மூன்று ஆண்டுகள் மட்டுமே பாகவதர் பாதிப்புடன் பாடினார்.

அதற்குப் பிறகு தம்க்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி, தமது கடின உழைப்பாலும் , கதாபாத்திரங்களுக்கும் , நட்சத்திரங்களுக்கும் ஏற்ப தமது குரலிலே வண்ணங்களையும், வித்தியாசங்களையும் காட்டக் கூடிய அளவுக்கு 'தனித்துவம்' பெற்ற பாடகராக முத்திரை பதித்தார்.



பாகவதரின் சாயலில் டி.எம்.எஸ். பாடிய சில பாடல்கள்:

1.கண்ணிருந்தும் குருடாய் இருந்து விட்டேன் (பட்டினத்தார்)

2. நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே(சதாரம்)

3. நாடகமெல்லாம் கண்டேன் ( மதுரை வீரன்)

4. வசந்த முல்லை போலே வந்து (சாரங்கதாரா)

5. ராதே உனக்கு கோபம் ( குலமகள் ராதை)

6. ஆடவேண்டும் மயிலே ( ' அருணகிரி நாதர்' )

7. வில்லேந்தும் வீரரெல்லாம் ( குலேபகாவலி)

8. ஏரிக்கரையின் மேலே (முதலாளி)

9. வாடாமலரே தமிழ்த்தேனே (அம்பிகாபதி)

10. முல்லை மலர் மேலே (உத்தம புத்திரன்)

11. வா கலாப மயிலே ( காத்தவராயன்)

12. பெண்களை நம்பாதே (தூக்குதூக்கி)

13. நான் பெற்ற செல்வம் (நான் பெற்ற செல்வம்)

14. தில்லையம்பல நடராஜா (சௌபாக்யவதி)

15. வாழ்ந்தாலும் ஏசும் ( நான் பெற்ற செல்வம்)

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

Thursday, July 27, 2006

டி.எம்.எஸ்ஸின் இளமைக் காலப் படங்கள்

டி.எம்.எஸ்ஸின் இளமைக் காலப் படங்கள்
புகைப் படங்கள் தொகுப்பு - யாழ் சுதாகர்]

டி.எம்.எஸ் நடித்த காட்சிகளைப் பார்க்க....

'கல்லும் கனியாகும்' ,'அருணகிரி நாதர்', பட்டினத்தார்'...ஆகிய படங்களில் டி.எம்.எஸ் நடித்த காட்சிகளைப் பார்க்க இங்கே சொடுக்குங்கள்.
[புகைப் படங்கள் தொகுப்பு - யாழ் சுதாகர்]

ஜேசுதாஸின் பெருந்தன்மை.....இளையராஜா

தமிழ்த் திரைப் பட வரலாற்றில் முதன் முதலாக ஸ்டீரியோ முறையில் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளிவந்த திரைப்படம் 'பிரியா'.

இந்தப் படத்தின் பாடல்களை இளையராஜா அவர்கள் ஸ்டீரியோ முறையில் பதிவு செய்த போது அதற்கு கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் பங்களிப்பும் உதவியும் முக்கியமாக இருந்தது என்கின்ற தகவல் பலருக்குத் தெரியாது.

ஆம். கே.ஜே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் சொந்தத் தேவைக்காக ஸ்டீரியோ தொழில் நுட்ப சாதனங்களை வாங்கிக் கொண்டு வந்து தமது வீட்டில் வைத்திருந்தார்.

இளையராஜா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்தக் கருவிகளை அவரிடம் கொண்டு வந்து கொடுத்தார் ஜேசுதாஸ்.'

பிரியா' படத்தின் பாடல் ஒலிப்பதிவு சென்னை பரணி ஸ்டூடியோவில் நடந்த போது ஒவ்வொரு பாடலும் ஒலிப்பதிவு செயப்படும் வரை இளையராஜாவோடு அருகில் இருந்து ஒத்தாசைகளையும் தாமே முன் வந்து வழங்கினார் ஜேசுதாஸ்.

பின்னாளில் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து பேசும் போது... ஜேசுதாஸின் பெருந்தன்மை ...என்று மனம் திறந்து பாராட்டி இருக்கிறார் இளையராஜா.

இளையராஜா சொல்கிறார்.

'பிரியா படத்திற்காக தமது கருவிகளைக் கொடுத்தமைக்காக எந்தக் கட்டணத்தையும் ஜேசுதாஸ் எங்களிடம் வாங்கவில்லை.

அந்த ஒலிப் பதிவின் போது அவர் செய்த உதவி அவரது சகோதரத்துவத்துக்கும்,ஆழ்ந்த நட்புணர்வுக்கும், பெருந்தன்மைக்கும் எடுத்துக் காட்டாகும்'.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் கசக்கிப் பிழிந்து விடுவார்.

தமது படங்களில் இடம் பெறும் பாடல்கள் விஷயத்தில் அதிக அக்கறையும் சிரத்தையும் எடுத்துக் கொள்ளுவார் எம்.ஜி.ஆர்.

தாம் எதிர்பார்க்கும் விதத்தில் மெட்டு வரும் வரையில் இசையமைப்பாளர்களை ஓய விட மாட்டார் எம்.ஜி.ஆர்.

இதைப் பற்றி ' மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கேட்டால் கதை கதையாகச் சொல்லுவார்.

தாம் நடிக்கும் படப் பாடல்களின் மெட்டுக்கள் மட்டுமன்றி...பாடல் வரிகளும் கூட மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதிலும் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளுவார்.

எந்தப் பெரிய கவிஞராக இருந்தாலும்...எம்.ஜி.ஆர், போதும் என்று சொல்லும் வரை ...அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பாடல் வரிகளை அடித்துத் திருத்தி எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் படங்களுக்கு மெட்டுப் போடுவதில் இருந்து பாடல் எழுதுவது வரை...இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு மிகுந்த பொறுமையும் , சகிப்புத் தன்மையும் அவசியமாக இருந்தது.

அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் கசக்கிப் பிழிந்து விடுவார்.

ஆனாலும் அளவுக்கு அதிகமான எம்.ஜி.ஆரின் தலையீடும், சிரத்தையும் தான் மற்ற நடிகர்களின் பழைய பாடல்களை விட எம்.ஜி.ஆரின் பழைய பாடல்களை இன்றைய 20 வயது இளைஞன் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் விரும்பிக் கேட்பதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்தன என்றால் அது மிகை அல்ல.

எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படம் 'நினைத்ததை முடிப்பவன்.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர், கொள்ளைக் கூட்டத்தின் மத்தியில் அவர்களை வேவு பார்க்க வந்து மாறு வேடத்தில் நின்று கொண்டிருக்கும் போலீஸ்காரர்கள் மத்தியில் பாடுவதாக ஒரு பாடல் காட்சி.

மெல்லிசை மன்னர் எம்.ஜி.ஆருக்கே உரித்தான உற்சாகம் பொங்கி வரும் விதத்தில் அருமையான ஒரு மெட்டமைத்து எம்.ஜி.ஆரிடம் பாடிக் காட்டினார்.

எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

ஒரு பிரபலமான கவிஞரை அந்த மெட்டுக்குப் பாடல் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

காட்சிச் சூழலை நன்கு கேட்டுத் தெரிந்து கொண்ட அந்தக் கவிஞர்...பாடல் எழுதி முடித்ததும் எம்.ஜி.ஆரிடம் படித்துக் காண்பித்தார்.

பாடல் வரிகள் நன்றாக இருந்தும் எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்த வரிகள் அமையாததால் மீண்டும் புதிதாக சில பல்லவிகளையும் ,சரணங்களையும் எழுதச் சொன்னார்.

அந்தக் கவிஞரும் சளைக்காமல் எழுதிக் கொடுத்தார்.

ஆனாலும் எம்.ஜி.ஆர் முகத்தில் திருப்தி இல்லை.

வேறு ஒரு பிரபல கவிஞரை அழைத்து இதே மெட்டுக்கு எழுத வைத்தார்கள்.

அந்தப் பாடலிலும் மக்கள் திலகத்துக்குத் திருப்தி இல்லை.

இதே போல அந்த நாளில் பிரபலமாக இருந்த 5, 6 கவிஞர்கள் அந்த மெட்டுக்குப் பாடல் எழுதப் பணிக்கப்பட்டனர்.எந்த வரிகளுமே எம்.ஜி.ஆரை வசீகரிக்கவில்லை.

கடைசியில் ஒரு மூத்த கவிஞரைக் கூப்பிட்டு எழுதச் சொன்னார்கள்.

பாடல் வரிகளைக் கேட்ட எம்.ஜி.ஆர் முகத்தில் பூரண சந்திரனாக புன்னகை பொங்கி வழிந்தது.

'இது தான் இதே தான் நான் எதிர் பார்த்தது ! என்றார் எம்.ஜி.ஆர்.

உடனே பாடல் ஒலிப் பதிவுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார் எம்.ஜி.ஆர் உற்சாகம் பொங்க.

அந்தப் பாடல் தான்....

' கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது...

அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்அடையாளம் காட்டும்பொய்யே சொல்லாதது ...'என்ற பாடல்.

எம்.ஜிஆரின் எதிர்பார்ப்பைப் பாடலில் கொண்டு வந்த அந்தப் பாடலாசிரியர் யார் என்று கேட்கின்றீர்களா?

கவிஞர் மருத காசி.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

'செய்வன திருந்தச் செய்' ....சிவாஜி மாண்பு




நடிகர் திலகம் நடிக்கும் அந்தப் படத்தில் அவர் பாடுவதாக உணர்வு பூர்வமான பாடல் ஒன்று.

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வனாதன் அவர்கள் மிகவும் வித்தியாசமாக அந்தப் பாடலுக்கான மெட்டை உருவாக்கினார்.

டி.எம்.எஸ் பாட வேண்டிய பாடல் அது என்பதால்...அவரிடம் அந்தப் பாடலைப் பாடிக் காட்டினார் மெல்லிசை மன்னர்.

மெட்டைக் கேட்டுப் பார்த்த போது டி.எம்.எஸ் முகத்தில் திருப்தியின் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

நான் வழக்கமாகப் பாடும் பாடல்களில் இருந்து இந்தப் பாடலின் மெட்டமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

அது மட்டுமன்றி....இந்த மெட்டு என் பாணிக்கு ஒத்து வரக் கூடிய விதத்திலும் இல்லை....எனவே...மன்னிக்க வேண்டும் ..இந்தப் பாடலை என்னால் பாட முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் டி.எம்.எஸ்.

'நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது...இது கொஞ்சம் வித்தியாசமான மெட்டுத் தான்...என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்...

ஆனால்...உங்களுக்கு இருக்கும் அபாரமான இசைப் புலமைக்கும்...குரல் வளத்திற்கும் இந்தப் பாடலை உங்களால் வெகு சிறப்பாகப் பாட முடியும்...

எனவே நீங்கள் மறுக்காமல் இந்தப் பாடலைப் பாடிக் கொடுக்க வேண்டும் என்று டி.எம்.எஸ்ஸிடம் வேன்டுகோள் விடுத்தார் எம்.எஸ்.வி.

அப்படியா?..இந்தப் பாடலோடு என்னை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு இருக்கிறீர்களோ?..என்று மறுபடியும் கொஞ்சம் கோபமாகவே கேட்டார் டி.எம்.எஸ்.

ஆனால்...எம்.எஸ்.வி...தமது முடிவில் இருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை.

'நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்..இந்தப் பாடலும்..உங்கள் பாடல்களில்...மற்றுமொரு தனித்துவம் பெற்ற பாடலாக மிளிரத் தான் போகிறது...'என்று சொல்லிய எம்.எஸ் வி...டி.எம்.எஸ்ஸை சமாதானம் செய்து அந்தப் பாடலைப் பாட வைத்தார்.

பாடல் காட்சியில் நடிக்க வந்த நடிகர் திலகத்திடம் அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.

பாடலைக் கேட்ட நடிகர் திலகம்...'உடனடியாக படப் பிடிப்பை ரத்து செய்யுங்கள்.இன்னொரு தினம் இந்தப் பாடல் காட்சிக்கான படப் பிடிப்பை வைத்துக் கொள்ளலாம்...'என்றார்.

அவரிடம் காரணம் கேட்ட போது அவர் சொன்னார்.

'மிக மிக வித்தியாசமாக இந்தப் பாடலின் மெட்டை உருவாக்கி இருக்கிறார் எம்.எஸ்.வி அவர்கள்.

டி.எம்.எஸ் மிகவும் அபாரமாக...இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்து இருக்கிறார்.

இந்தப் பாடலை ஒரு சவாலான பாடலாக நான் கருதுகிறேன்.

டி.எம்.எஸ்ஸும், எம்.எஸ்.வியும் உயிரைக் கொடுத்து உழைத்த இந்தப் பாடலில் எனது நடிப்பும் உயிரோட்டமாக அமையுமாறு நான் பார்த்துக் கொள்ள வேண்டாமா? அதற்கு எனக்கு அவகாசம் வேண்டும்...அதனால் தான் படப் பிடிப்பை ரத்து செய்யச் சொன்னேன்...என்றாராம் சிவாஜி.

சொன்னது போலவே...அந்தப் பாடலை பல முறை கேட்டுப் பார்த்து...அந்த மெட்டையும்...டி.எம்.எஸ்ஸின் குரலில் உள்ள பாவங்களையும் நன்கு உள்வாங்கிக் கொண்ட நடிகர் திலகம்...மிக வித்தியாசமாக அந்தப் பாடல் காட்சியை நடித்துக் கொடுத்தார்.

அந்தப் பாடல் எது என்று கேட்கிறீர்களா?

'சாந்தி ' திரைப் படத்தில் இடம் பெற்ற ' யார் அந்த நிலவு?...ஏன் இந்தக் கனவு?....

அந்தக் காலத்துக் கலைஞரகளின் ஆழ்ந்த தொழில் ஈடுபாட்டுக்கும்.....'செய்வன திருந்தச் செய்' என்கின்ற தொழில் நேர்த்தியை மதிக்கின்ற மாண்புக்கும்...இந்த சம்பவம் ஒரு நல்ல எடுத்துக் காட்டு.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

'விளையும் பயிரை முளையிலேயே தெரியும் '....ஜேசுதாஸ்



தெருவில் உள்ள தேனீர் கடைகளில் வானொலிப் பெட்டிகளில் திரைப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்.

சிறுவனாக இருந்த போது ஜேசுதாஸ்...அந்தத் தேனீர் கடைகளின் பக்கம் நீண்ட நேரம் கால் கடுக்க நின்று வானொலியில் இருந்து வரும் பாடல்களை எல்லாம் ரசித்து விட்டு தாமதமாக பள்ளிக்குப் போவாராம்.

இதனால்...இசை தவிர்ந்த மற்றப் பாடங்களில் அவர் குறைவான மதிப்பெண்களைத் தான் பெற முடிந்தது.

ஜேசுதாஸின் ஐந்தாவது வயது முதல் பள்ளியில் அவர் கலந்து கொண்ட அத்தனை இசைப் போட்டிகளிலும் அவருக்குத் தான் முதற் பரிசு கிடைத்தது.

எல்லா வருடங்களிலும்...எல்லா இசைப் போட்டிகளிலும் அவர் ஒருவரே பரிசுகளைத் தட்டிச் சென்றதால்...தலைமை ஆசிரியர் யோசித்துப் பார்த்தார்.

ஜேசுதாஸை தமது..இருப்பிடத்துக்கு வரவழைத்து....'இது வரை நீ பங்கு பற்றிய எல்லாப் போட்டிகளிலும் முதற் பரிசுகளைத் தட்டிச் சென்று விட்டாய்.சந்தோஷமாகத் தான் இருக்கிறது...

ஆனால்...புதியவர்களுக்கும் வெற்றி வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் அல்லவா?

ஆகவே இனிமேல் இந்தப் பள்ளிக்குள் நடை பெறும் இசைப் போட்டிகள் எதிலும் நீ கலந்து கொள்ளாதே.

ஆனால்..பள்ளிக்கு வெளியே நடக்கும் இசைப் போட்டிகளில் நீ தாராளமாகக் கலந்து கொள்ளலாம்..என்றாராம்.

தலமை ஆசிரியர் சொல்வதில் இருந்த நியாயத்துக்குக் கட்டுப்பட்டு அன்று முதல் ஜேசுதாஸ் பள்ளியில் நடந்த எந்த ஒரு இசைப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.

பின்னாளில் தொடர்ந்து பல வருடங்கள்...யாருக்குமே விட்டு வைக்காமல் ஜேசுதாஸ் தேசிய விருது உட்பட பல உயர்ந்த விருதுகளைத் தட்டிக்கொண்டது சங்கீத சரித்திரத்தில் இன்றும் முறியடிக்கப் பட முடியாத 'அசுர ' சாதனை.

'விளையும் பயிரை முளையிலேயே தெரியும் ' என்பதற்கு...ஜேசுதாஸின் பள்ளிப் பருவத்தில் நடந்த இந்த சம்பவம் ஒரு எடுத்துக் காட்டு.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

Friday, June 23, 2006

டி.எம்.எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? - சிவாஜி




''வியட்நாம் வீடு ' சுந்தரத்தின் 'கௌரவம்' படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ' கண்ணா நீயும் நானுமா? என்ற பாடலைப் பாட வந்த போது,

படத்தின் கதை,அந்தப் பாடலைப் பாடப் போகும் கதா பாத்திரத்தின் குண நலன்கள் ,மற்றும் மனோ பாவம், ஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தக் கதா பாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு,

இன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதா பாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ்.

அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப் பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.

'இன்னும் ஒரு தடவை போடுங்கள்...இன்னும் ஒரு தடவை'...என்று...பல தடவை...திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி.

இது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது!

காரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.

ஆனால் இந்தப் பாடலை அவர் பத்துத் தடவைக்கு மேலாக கண்களை மூடிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.

இதை நீண்ட நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம் நடிகர் திலகதின் அருகே சென்று அவரிடம் மிகவும் பணிவான குரலில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.

'ஒரு தடவை, அல்லது இரு தடவை பாடலைக் கேட்டு விட்டு உடனே நடிக்க வந்து விடும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்பக் கேட்பதன் ரகசியம் என்ன?'...

'சுந்தரம்!...டி.எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலை, மிகுந்த உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி இருக்கின்றார்.

பல்லவியில்...ஒரு விதமான பாவம்..ஆக்ரோஷம்...அடுத்த சரணத்தில்..இன்னொரு விதமான..தொனி.மற்ற சரணத்தில்...இன்னொரு பரிமாணம்...என குரலால் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் டி.எம்.எஸ்.

ஒரே வரியையே இரண்டு இடத்தில் 'ரிபீட்' பண்ணும் போது இரண்டு விதமான தொனிகளில் பாடுகிறார்.

உதாரணமாக ' நீயும் நானுமா?' என்ற வரியை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் ஒவ்வொரு பாவத்தில் அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.

இப்படியெல்லாம்..அற்புதமாக அவர் பாடிக் கொடுத்த பாட்டை கவனமாக நான் நடித்துக் கொடுகா விட்டால் இதைப் பாடிய டி.எம்.எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்றாராம் சிவாஜி.

நடிகர் திலகத்தின் செய் தொழில் நேர்த்திக்கும்,ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாட்டுக்கும் ,தன்னடக்கத்திற்கும் ,சக கலைஞர்களின் திறமைகளைப் பகிரங்கமாக மதிக்கும் பரந்த தன்மைக்கும் ஒரு சிலிர்க்க வைக்கும் எடுத்துக் காட்டு.

LINKS

1. டி.எம்.எஸ் , சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரின் அபூர்வ படங்கள்.

2. RADIO PROGRAMMES OF YAZHSUTHAKAR [yazh suthahar] [yazh sudhakar]

3.கே.எஸ்.ராஜா அவர்களின் குரலைக் கேட்டு ரசிக்க இங்கே சொடுக்குங்கள். [ORIGINAL VOICE OF K.S.RAJA]

--- --- ---

பாடகர்களுக்காக முதன் முதலில் உரிமைப் போர் நடத்திய டி.எம்.எஸ்....

'பாகப் பிரிவினை' படத்தின் நூறாவது நாள் விழா சென்னையில் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு 'ஏழிசை அரசர்' டி.எம்.எஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள்.

விழாவுக்கு வந்த டி.எம்.எஸ்ஸை அன்புடன் வரவேற்ற சரவணா பிலிம்ஸ் அதிபர் வேலுமணி... விழாவின் துவக்கத்தில் கடவுள் வாழ்த்துப் பாடும்படி அவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

டி.எம்.எஸ் கடவுள் வாழ்த்துப் பாடியதும் விழா துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 'பாகப் பிரிவினை' படதில் நடித்த நட்சத்திரங்களுக்கும், அந்தப் படத்தோடு சம்பத்தப்பட்ட கலைஞர்களுக்கும் வெற்றிக் கேடயங்களை பரிசளித்தனர்.

அந்தப் படத்தில் மிகவும் ஹிட்டான நான்கு பாடல்களை தாம் பாடியிருப்பதால் தம்மையும் அழைத்து வெற்றிக் கேடயம் வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் கடைசிவரை டி.எம்.எஸ் காத்திருந்தார்.

ஆனால் நடிகர் நடிகைகள் துவங்கி இசையமைப்பாளர் வரைக்கும் எல்லோருமே மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

வெற்றி கேடயங்களைப் பெற்றுச் சென்றனர்.

அந்தப் படத்தில் மிகச் சிறிய வேடத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்துக்கும் கேடயம் வழங்கப்பட்டது.

ஆனால் டி.எம்.எஸ் மட்டும் அழைக்கப்படவே இல்லை.

இந்த சம்பவம் டி.எம்.எஸ்ஸை மிகவும் ஏமாற்றமடையச் செய்ததோடு வருந்தவும் வைத்தது.

விழா நிறைவடைந்ததும் டி.எம்.எஸ்ஸை தேசிய கீதத்தையும் பாடும்படி வேண்டுகோள் விடுத்தார்கள்.

தமது வருத்தத்தை வெளியே காட்டாமல் அதையும் பாடி முடித்து விட்டு மனச் சுமையுடன் வீடு திரும்பினார் டி.எம்.எஸ்.

வீட்டுக்குத் திரும்பிய பிறகும் இந்த சம்பவம் டி.எம்.எஸ்ஸை உறுத்திக் கொண்டே இருந்தது.

ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு 'சுதேச மித்திரன்' ஆசிரியரை தொலை பேசியில் தொடர்பு கொண்டார் டி.எம்.எஸ்.

நடந்த சம்பவத்தை அவரிடம் பகிர்ந்து கொண்ட டி.எம்.எஸ்....தமது உள்ளத்து உணர்வுகளை ஒரு பேட்டியாகத் தர விரும்புவதாகக் கூறினார்.

'ஏன் இந்த ஓர வஞ்சனை?' என்ற தலைப்பில் சுடச் சுட அந்தப் பேட்டி
சுதேச மித்திரனில் பிரசுரமானது.

அந்தப் பேட்டியில் டி.எம்.எஸ் இவ்வாறு கூறியிருந்தார்.

" சென்ற வாரம் 'பாகப் பிரிவினை' படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு எனக்கும் அழைப்பு வந்தது.

விழாவில் நானும் கலந்து கொண்டு ஆரம்பத்தில் கடவுள் வணக்கமும் , நிறைவாக தேசிய கீதமும் பாடினேன்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடிகர் நடிகையர்களுக்கும்,இசையமைப்பாளருக்கும்,பாடலாசிரியருக்கும் வெற்றிக் கேடயங்களை வழங்கினார்கள்.

இத்தனை பேரையும் மறக்காமல் பரிசு கொடுத்தவர்கள் ஏன் பாடகர்களை மட்டும் மறந்து போனார்கள்?

இந்தப் படத்திலே நான் நான்கு பாடல்களைப் பாடியிருக்கிறேன்.

மறுபடியும் அந்தப் படத்தை திரையிடும் போது நான் பாடிய பாடல்களை நீக்கி விட்டு அந்தப் படத்தை திரையிட்டுப் பாருங்கள்.

அப்போதும் படம் வெற்றிகரமாக ஓடினால் நான் பாடுவதையே நிறுத்திக் கொள்ளுகிறேன்.'....என்றபடி டி.எம்.எஸ்ஸின் அந்த ஆவேசமான பேட்டி தொடர்ந்தது.

திரை உலகில் டி.எம்.எஸ்ஸின் பேட்டி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

அன்றைய பாடகர்,பாடகிகள் எல்லாரும் அந்தப் பேட்டியைப் பார்த்து மனம் குளிர்ந்தார்கள்.

டி.எம்.எஸ்ஸிடம் தொலை பேசியிலும் நேரிலும் தமது நன்றியை தெரிவித்தார்கள்.

இந்தப் பேட்டியைப் படித்துப் பார்த்த தயாரிப்பாளர் வேலுமணி அவர்கள் , அடுத்த நாளே அவசர அவசரமாக டி.எம்.எஸ்ஸை வந்து பார்த்தார். சமாதானம் சொன்னார்.

சுதேச மித்திரன் பேட்டியில் உங்கள் உள்ளத்து உணர்வுகளையும், வருத்ததையும் புரிந்து கொண்டேன்.

பாடுவதை நிறுத்தி விடுவேன் என்றெல்லாம் பெரிய பெரிய வார்த்தைகளை நீங்கள் சொல்லக் கூடாது.

உங்கள் கோபம் நியாயமானது தான்.நான் இப்போது 'பாவ மன்னிப்பு' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன்.

நிச்சயம் அந்தப் படம் பெரும் வெற்றியைப் பெறும்.

அந்தப் படத்தின் நூறாவது நாள் விழா நடைபெறும் போது நிச்சயமாக பாடகர்களுக்கும் வெற்றிக் கேடயம் வழங்குவேன் ' .....என்று உறுதிபடக் கூறினார்.

சொன்னது போலவே செய்தும் காட்டினார் வேலுமணி.

சென்னை அசோகா ஹோட்டலில் நடந்த 'பாவ மன்னிப்பு' நூறாவது நாள் விழாவில் படத்திற்காக உழைத்த அத்தனை பாடகர்களும் பாடகிகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.

அன்று முதல் மற்ற பட நிறுவனங்களும் பாடகர்களுக்கும் வெüறிக் கேடயம் வழங்கத் துவங்கின.

பாடகர்களுக்காக முதன் முதலில் உரிமைப் போர் நடத்தி அதில் வெற்றியும் கண்ட உத்தமர் என்று டி.எம்.எஸ்ஸை பாடகர் உலகமே பாராட்டியது.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

Monday, June 12, 2006

மறு வாழ்வு தந்த இறைவன்...டி.எம்.எஸ்...




1955 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்.

ஜி.ராமனாதனின் இசையில் 'அம்பிகாபதி' படத்தின் பாடல் ஒலிப் பதிவு தேனாம்பேட்டையில் அமைந்துள்ள ரேவதி ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருக்கிறது.

[சிவாஜி-பி.பானுமதி நடித்த படம்]அந்த ஒலிப் பதிவுக் கூடம் மிகவும் வசதி படைத்த கூடம் அல்ல.சாதாரண ஒரு தகரக் கொட்டகை.

பாடகர், பாடகியர் தனியாக நின்று பாடக் கூடிய கண்ணாடிக் கூண்டு வசதி எதுவும் அந்தக் காலத்தில் இல்லை.தரையில் மணல் பரப்பி அதன் மீது அமர்ந்து கொண்டு தான் பாட வேண்டும்.

ஒலி வாங்கி எனப்படும் 'மைக்' பாடகர், பாடகி அமர்ந்திருக்கும் இடத்துக்கு மேலே அதாவது அவர்களின் தலைக்கு மேலே கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும்.

அந்த மைக் மிக பாரமாக இருக்கும்.அதாவது இரும்புக் குண்டைப் போல கனமாக இருக்கும்.

அந்த மணலின் மேல் கம்பீரமாக அமர்ந்து கொண்டு ஜி.ராமனாதனின் மெட்டை கவனமாக உள்வாங்கிக் கொண்டு பாடல் வரிகளோடு இரண்டறக் கலந்து உணர்ச்சிப் பிரவாகத்துடன் அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கின்றார் டி.எம்.எஸ்.

அப்போது யாருமே எதிர்பாராத விதமாக அந்த அசம்பாவிதம் நிகழ்கிறது.

டி.எம்.எஸ்ஸின் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த அந்த மைக் அறுந்து நேராக டி.எம் எஸ்ஸின் தலையை குறி பார்த்து விழுகிறது.

பாடும் போது அந்த கதா பாத்திரமாகவே தம்மை மாற்றிக் கொண்டு அதாவது நடித்துக் கொண்டே பாடுவது டி.எம்.எஸ்ஸின் இயல்பு.

கைகளை நளினமாக அங்கும் இங்கும் ஆட்டுவார்.தலையை பக்க வாட்டிலும் முன்னும் பின்னுமாக ஸ்டைலாக அசைப்பார்.

அப்படி அவர் தலையை ஸ்டைலாக பின்னுக்கு இழுத்தபடி பாடிய அந்த மின்னல் நேரத்தில் மைக் கீழே வந்ததால் அவர் தலை தப்பியது.

அறுந்த மைக்கானது சம்மணமாக உட்கார்ந்திருந்த டி.எம்.எஸ்ஸின் கால்களுக்கும் உடலுக்கும் இடையில் போய் விழுந்தது.

ஸ்டூடியோவில் இதைப் பார்த்த வாத்தியக் கலைஞர்கள் அனைவருமே சில வினாடிகள் பிரமை பிடித்தவர்கள் போல நின்றார்கள்.

ஜி.ராமனாதன் பயந்தே போய் விட்டார்.

'இவன் இன்னும் பல்லாண்டுகள் உயிரோடு இருந்து காலா காலத்துக்கும் அழியாத பாடல்களால் தமிழன்னையின் காதுகளை குளிர வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது இறைவன் சித்தம் போலும்.... அது தான் அது தான் அடியேனுக்கு அவன் மறு வாழ்வு தந்திருக்கின்றான்'....என்கிறார் ஏழிசை அரசர்.

------ ------ -----

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

Thursday, May 25, 2006

டி.எம்.எஸ்...எம்.எஸ்.வி கூட்டணியின் அபார ஆற்றல்...





நடிகர் திலகம் பாடுவதாக வரும் அந்தப் பாடலை வழக்கம் போல

டி.எம் எஸ்ஸைப் பாட வைக்காமல்

வேறொரு பாடகரைப் பாட வைத்தார்
மெல்லிசை மன்னர் எம். எஸ்.வி.

மிகவும் உணர்வு பூர்வமான ஒரு சோகப்பாடல் அது.

ஆனாலும் அந்தப் பாடகர் மிகவும் சிறப்பாகப் பாடியதால் மெல்லிசைமன்னருக்கு திருப்தி.

சிவாஜியும் அந்த குரலை ஏற்றுக் கொன்டார்.

சிவாஜி வாயசைத்து நடிக்க அந்தப் பாடல் காட்சி படமானது.

ஆனால் அந்தப்பாடல் காட்சியை திரையில் போட்டுப் பார்த்த போது பாடகரின்குரல்,சிவாஜியின் நடிப்பு எல்லாமே நன்றாக இருந்தும் ,

ஏதோஒன்று குறைவது போலத் தோன்றியது.

மெல்லிசைமன்னருக்கும் அந்தக் காட்சி போட்டுக் காட்டப்பட்டது.

ஆமாம் சிவாஜியின் செழுமையான நடிப்போடு அந்தக்குரல் ஒட்டவில்லை என்றார்எம்.எஸ்.வி.

பாடல் காட்சியை படமாக்கி முடித்து விட்டோமே இனி என்ன செய்வது ?

என்று எல்லோருக்குமே குழப்பம்.

அந்தக் காலத்தில் இன்றைக்கு இருப்பதைப் போன்ற

அதி நவீனதொழில் நுட்பவசதிகள் இல்லை.

எனினும்,எம்.எஸ்.வி. யோசித்துப் பார்த்தார்.


திடீரென ஒரு எண்ணம் அவர் மூளையில் மின்னலிட்டது.

உடனே டி.எம்.எஸ் அவர்களை ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்தார்.

அந்தப்பாடலுக்கு சிவாஜி நடித்த காட்சியை திரையில் ஓட விடும்படி சொன்னார்.

அதில் சிவாஜியின் வாய் அசைவைப் பார்த்து...

அதற்கு ஏற்ற படி அந்தப்பாடலைப் பாடும்படி டி.எம்.எஸ்ஸிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மிகவும் சவாலான ஒரு வேலை தான்.

ஆனால் டி.எம்.எஸ், சிவாஜியின் வாய் அசைவையும் முக பாவங்களையும் நன்கு கவனித்துக் கொண்டே அந்தப்பாடலைப் பாடிமுடித்தார்.

மெல்லிசைமன்னர் ஓடி வந்து டி.எம்.எஸ்ஸை

கை கொடுத்துப் பாராட்டினார்.

இந்தப்பாடல் எம்.எஸ்.வி, டி.எம்.எஸ் இருவருக்கும் ஒருசவாலான அனுபவம் மட்டுமல்ல.... வித்தியாசமான அனுபவமும்கூட.

வழக்கமாக டி.எம்.எஸ் பாடிய பாடலைக் கேட்டு அந்தப் பாடலுக்கு ஏற்ப சிவாஜி வாய் அசைப்பார்.

ஆனால் இந்தப் பாடலைப்பொறுத்தவரை சிவாஜியின் வாய் அசைவைப் பார்த்து அதற்கு ஏற்ப டி.எம்.எஸ் பாடினார்.

டிஜிட்டல்,ஸ்டீரியோ, நவீன டிராக் சிஸ்டம் போன்ற

அதி நவீனவசதிகள் இல்லாத எழுபதுகளில்

கருவிகளை நம்பாமல்

திறமையையும் தன்னம்பிக்கையையும் மட்டும் நம்பி

இந்த சாதனையைப் படைத்த இருவரும்

தமிழ்த் திரை இசையின் அதிசயங்கள்!

இந்த இசை அதிசயங்களின் கூட்டணியில் பதிவான

அந்தய பாடல் எது?என்று கேட்கின்றீர்களா?

'கௌரவம்' படத்தில் இடம் பெற்ற

'பாலூட்டி வளர்த்த கிளி'என்ற பாடல் தான் அது.

------- ------ -------
'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

சிவாஜிக்காக முதன் முதலில் எஸ்.பி.பி பாட வந்த போது...








நடிகர் திலகத்திற்காக முதன் முதலாக

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்த போது ...

எனக்காக நீங்கள் குரலை மாற்றிப் பாட வேண்டாம்..

உங்கள் பாணியிலேயே பாடுங்கள்...

நடிக்கும் போது உங்கள் குரலுக்கு இசைவாக எனது நடிப்பை அமைத்துக்கொள்கிறேன் என்றாராம் சிவாஜி.

சிவாஜி சொன்னபடி எஸ்.பி.பி. தமக்கே இயல்பான 'நளினம் கொஞ்சும்' நந்தவனக் குரலில் அந்தப் பாடலை மிக சுதந்திர உணர்வோடு பாடினார்.

பாடல் பிரமாதமாக பதிவானது.

ஆனால் பாடலைக் கேட்ட போது,

டி.எம்.எஸ்ஸின் குரலைப் போல இந்த புதிய குரல்... அதுவும் மென்மையான குரல் நடிகர் திலகத்தின் நடிப்போடு இசையுமா?

என்று சிலர் சந்தேகப் படவும் செய்தனர்.

ஆனால் அந்தப் பாடல் காட்சி படமாக்கப் பட்ட போது...

எஸ்.பி.பியின் நளினமான குரலுக்கு ஏற்ப தமது நடையையும் பாவனைகளையும் அசைவுகளையும் குழையக் குழைய வெளிப்படுத்தினார் நடிகர் திலகம்.

சந்தேகப் பட்டவர்கள் பிரமித்துப் போனார்கள்.

பிரமிப்பின் மறு பெயர் தானே நடிகர் திலகம் !

அந்தப் பாடல் ...'சுமதி என் சுந்தரி' படத்தில் மெல்லிசை மன்னரின் இசை வார்ப்பில் மலர்ந்த' பொட்டு வைத்த முகமோ'.

காலப் புயலில் கலைந்து போகாத பாட்டு தீபங்களில் இன்றும் இளமை ஊஞ்சலாடும் இந்தப் பாடலும்...
பாடல் காட்சியும் ஒரு வசந்த வரலாறு.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

பாடல்களில் எதிர்மறை வரிகளைத் தவிர்த்த எம்.ஜி.ஆர்...






'வானம்பாடி' படத்தில்..டி.எம்.எஸ்ஸின் வேண்டுகோளுக்கு இணங்க

தனது பாடல் வரியில் கண்ணதாசன் திருத்தம் செய்ததைப் போல...

'சங்கே முழங்கு' படப் பாடலிலும்

எம்.ஜி ஆரின் திருப்திக்காக ஒரு திருத்தம் செய்து கொடுத்தார்.

'நாலு பேருக்கு நன்றி...அந்த நாலு பேருக்கு நன்றி...

தாயில்லாத அனாதைக்கெல்லாம்

தோள் கொடுத்து தூக்கிச் செல்லும்

அந்த நாலு பேருக்கு நன்றி..'

என்று கவியரசர் எழுதிய பாடலில் வரும்

கடைசி சரணத்தில்....

'வாழும் போது வருவோர்க்கெல்லாம்

வார்த்தையாலே நன்றி சொல்வோம்.

போகும் போது வார்த்தை இல்லை...

போகு முன்னே சொல்லி வைப்போம்...'

என்று முடித்திருந்தார்.


'போகும் முன்னே சொல்லி வைப்போம்..'என்ற வார்த்தையை கொஞ்சம் மாற்றலாமே... என்று எம்.ஜி.ஆர்..அபிப்பிராயப்பட்டார்.

உடனே கவியரசர்..அந்த சரணத்தை..சிறு மாற்றங்களுடன்...'

'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்..

வார்த்தை இன்றிப் போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்...'

என்று எழுதிக் கொடுக்க...மக்கள் திலகத்தின் முகத்தில்...பரம திருப்தி.

தனது பாடல்களில்...வலிமையான எதிர் மறை வார்த்தைகள்...

அல்லது அறச் சொற்கள் வருவதைஎம்.ஜி.ஆர் தவிர்ப்பது வழக்கம் என்பதற்கு...இந்த சம்பவமும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

தற்கொலையைத் தடுத்து நிறுத்திய பி.பி.எஸ்ஸின் பாடல்...




'மென்மைக்குரல் மன்னர்' பி.பி.சீனிவாஸ் அவர்கள்
முதன்முதலாகப் பாடிய படம் 'மிஸ்டர் சம்பத்' என்ற தெலுங்குப் படம்.

பிரபல வீணை வித்வான் ஈமனி சங்கர சாஸ்திரி¸ இசை வார்ப்பில் உருவான படம்.

தமிழில் இவர் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?

'பிரேம பாசம்'படத்தில் இடம் பெற்ற 'அவனல்லால் புவியில் ஓர் அணுவும் அசையாது '.

தமிழில் இவருக்கு முதல் திருப்பு முனை கொடுத்தபடம்
'அடுத்தவீட்டுப் பெண்'.

ஆதி நாராயண ராவின் அமுத இசையில் மலர்ந்த இந்தப் படத்தில் இவர்பாடிய 'கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே' ,வாடாத புஷ்பமே'ஆகிய பாடல்கள் தமிழ் ரசிக நெஞ்சங்களில் பெரும் வரவேற்பைப்பெற்றுத் தந்தன.

'கவியரசர்'கண்ணதாசன் எழுதி இவர் பாடிய பாடல்கள் எல்லாமே இவருக்குப்
பிடித்த பாடல்கள் தான் என்றாலும்...

அவற்றில் இவர் அடிக் கோடிட்டுக் காட்டி ஆனந்தப் படும் பாடல்கள் இரண்டு.

1.காலங்களில் அவள் வசந்தம். [பாவ மன்னிப்பு ]

2. மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப்பட வேñடும் [கொடி மலர்]

பி.பி.எஸ் அவர்களை ஒரு முறை யான் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவரது இசை வாழ்வில் அவரை மிகவும் நெகிழ வைத்த ஒரு சம்பவம் பற்றிக் கூறும்படி வேண்டினேன்.

அவர் சொன்னார்.

கேரளாவைச் சேர்ந்தவன் அந்த இளைஞன்.

அவன் தொட்டதெல்லாம் தோல்வியில் முடிந்தது.

ஏமாற்றங்களும் ,அவமானங்களுமே அவன் வாழ்க்கையில் அன்றாட வரவுகள்.

கனவுகள் எல்லாமே கானல் நீராக.....

வாழ்க்கையின் நிஜங்களும், யதார்த்தமும் அவனைப் பயமுறுத்த...

தற்கொலை என்றவிபரீத முடிவுக்கு அவன் தள்ளப்படுகிறான்.

அந்த சூழ்நிலையில் எதிர் பாராத விதமாக வானொலியில் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தப்பாடலை அவன் கேட்க நேரிடுகிறது.

அந்தப் பாடல் அவன் உள்ளத்தில் ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது.

மூன்று நிமிடõ மட்டுமே ஒலித்த அந்தப்பாடல் மின்னல் வேகத்தில் அவனுக்குள் ஏராளமான மாறுதல்களை நிகழ்த்துகிறது!

குழப்பங்களைக் குலைத்து ,கலக்கங்களைக் கலைத்து,

தெளிந்த நீரோடை போல அவன் மனதை மாற்றுகிறது.

எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் சாதனைகளின் சாலைகள் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற தெளிவும்.... வாழ்ந்தேஆக வேண்டும் என்ற வைராக்கியமும் அவனுள் உருவாகிறது.

'ஆயிஷா' என்ற மலையாளப் படத்தில் யான் பாடிய....

'யாத்ரக்காரா போகுக போகுக'என்ற பாடல் தான் அந்த இளைஞனுக்கு மறு வாழ்வு கொடுத்த பாடல் என்று அறிந்தேன்.

அந்தப் பாடலில் வரும்....

'ஒரு வழி அடைக்கும் போது...

ஒன்பதுவழி திறக்கும்' என்ற வரி தான்

திக்கற்றுப் போய் நின்ற தன் கைப்பிடித்து வந்து

நம்பிக்கையின்கரை சேர்த்தது என்று அந்த இளைஞன் நன்றிக்கடிதத்தில் எழுதியதை நான் படித்த போது......

இசைப் பணி செய்யுமாறு என்னை அனுப்பி வைத்த இறைவனுக்கு கண்கள் பனிக்க நன்றி சொன்னேன் என்றார் பி.பி.எஸ் உணர்வு பொங்க.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

கண்ணதாசனின் பெருந்தன்மை.....டி.எம்.எஸ்





'வானம்பாடி' படத்தில்...ஒரு பாடல்...

'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்...
அவன் காதலித்தே வேதனையில்
சாக வேண்டும்...'

என்று கவியரசர் கண்ணதாசன் எழுத...'திரை இசைத் திலகம் 'கே.வி.மகாதேவன் இசையமைக்கிறார்.

அந்தப் பாடலை...டி.எம்.எஸ் அவர்களிடம்...கே.வி.மகாதேவனின் உதவியாளர் பாடிக் காட்டுகிறார்.

பாடலைக் கேட்டுப் பார்த்த டி.எம்.எஸ்...

'இந்தப் பாடலின் பல்லவியில் கடவுளை சாக வேண்டும் என்று வரும் வரியை நான் எப்படிப் பாடுவது?

மனிதனுக்குத் தான் மரணம் உண்டு...

கடவுள் சாகா வரம் பெற்றவர்...

எனவே அவரை சாக வேண்டும் என்று வரும் வரிகளை...

கடவுளை சதா புகழ்ந்து பாடிய என் வாயினாலேயே பாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார்.

டி.எம்.எஸ் இப்படிச் சொல்லும் போது...கவியரசர் கண்ணதாசனும் அருகில் இருந்தார்.

'கடவுளை சாடுவதற்காக அப்படி எழுதவில்லை.

கதாபாத்திரம்...காதல் தோல்வியில் அப்படி பாடுவதாக...கதையின் போக்கை அனுசரித்து அப்படி எழுதினேன்.'.என்று..கவிஞர், டி.எம்.எஸ்ஸிடம் சமாதானம் சொன்னார்.

உடனே டி.எம்.எஸ்..கதாநாயகன்...முட்டாள் தனமாக காதலித்து..பின்பு அது..கை கூடாமல் போகும் போது..அந்தக் குற்றத்தை...அறிவார்ந்த பொருளான கடவுள் மீது சாட்டுவதற்கு எந்த நியாயமும் இல்லை.

எனவே...கடவுள்..சாக வேண்டும் என்ற வரியை மட்டும் நான் பாட மாட்டேன்...என்றார் மீண்டும் பிடிவாதமாக.

கண்ணதாசன் மட்டுமல்ல..கே.வி.மகா தேவனும்...எவ்வளவோ சமாதானம் செய்தும்...டி.எம்.எஸ் தனது முடிவில் தீர்மானமாக இருந்தார்.

உடனே கண்ணதாசன்...'அவ்வளவு தானே முருக பக்தரே...சாக வேண்டும் என்ற வரியை...'வாட வேñடும்' என்று மாற்றி எழுதித் தருகிறேன்...' என்று சொல்லி...அதை வாங்கி திருத்தம் செய்து கொடுத்தார்.

கவியரசராக அவர் இருந்த போதிலும்...சக கலைஞனின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற உணர்வுடன் கண்ணதாசன் அன்று பெருந்தன்மையாக நடந்து கொண்ட விதம்...

இன்றும் என்னை வியக்க வைக்கிறது...வணங்க வைக்கிறது என்கிறார் டி.எம்.எஸ்.

------ ------ -------

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.