Monday, June 12, 2006

மறு வாழ்வு தந்த இறைவன்...டி.எம்.எஸ்...




1955 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்.

ஜி.ராமனாதனின் இசையில் 'அம்பிகாபதி' படத்தின் பாடல் ஒலிப் பதிவு தேனாம்பேட்டையில் அமைந்துள்ள ரேவதி ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருக்கிறது.

[சிவாஜி-பி.பானுமதி நடித்த படம்]அந்த ஒலிப் பதிவுக் கூடம் மிகவும் வசதி படைத்த கூடம் அல்ல.சாதாரண ஒரு தகரக் கொட்டகை.

பாடகர், பாடகியர் தனியாக நின்று பாடக் கூடிய கண்ணாடிக் கூண்டு வசதி எதுவும் அந்தக் காலத்தில் இல்லை.தரையில் மணல் பரப்பி அதன் மீது அமர்ந்து கொண்டு தான் பாட வேண்டும்.

ஒலி வாங்கி எனப்படும் 'மைக்' பாடகர், பாடகி அமர்ந்திருக்கும் இடத்துக்கு மேலே அதாவது அவர்களின் தலைக்கு மேலே கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும்.

அந்த மைக் மிக பாரமாக இருக்கும்.அதாவது இரும்புக் குண்டைப் போல கனமாக இருக்கும்.

அந்த மணலின் மேல் கம்பீரமாக அமர்ந்து கொண்டு ஜி.ராமனாதனின் மெட்டை கவனமாக உள்வாங்கிக் கொண்டு பாடல் வரிகளோடு இரண்டறக் கலந்து உணர்ச்சிப் பிரவாகத்துடன் அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கின்றார் டி.எம்.எஸ்.

அப்போது யாருமே எதிர்பாராத விதமாக அந்த அசம்பாவிதம் நிகழ்கிறது.

டி.எம்.எஸ்ஸின் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த அந்த மைக் அறுந்து நேராக டி.எம் எஸ்ஸின் தலையை குறி பார்த்து விழுகிறது.

பாடும் போது அந்த கதா பாத்திரமாகவே தம்மை மாற்றிக் கொண்டு அதாவது நடித்துக் கொண்டே பாடுவது டி.எம்.எஸ்ஸின் இயல்பு.

கைகளை நளினமாக அங்கும் இங்கும் ஆட்டுவார்.தலையை பக்க வாட்டிலும் முன்னும் பின்னுமாக ஸ்டைலாக அசைப்பார்.

அப்படி அவர் தலையை ஸ்டைலாக பின்னுக்கு இழுத்தபடி பாடிய அந்த மின்னல் நேரத்தில் மைக் கீழே வந்ததால் அவர் தலை தப்பியது.

அறுந்த மைக்கானது சம்மணமாக உட்கார்ந்திருந்த டி.எம்.எஸ்ஸின் கால்களுக்கும் உடலுக்கும் இடையில் போய் விழுந்தது.

ஸ்டூடியோவில் இதைப் பார்த்த வாத்தியக் கலைஞர்கள் அனைவருமே சில வினாடிகள் பிரமை பிடித்தவர்கள் போல நின்றார்கள்.

ஜி.ராமனாதன் பயந்தே போய் விட்டார்.

'இவன் இன்னும் பல்லாண்டுகள் உயிரோடு இருந்து காலா காலத்துக்கும் அழியாத பாடல்களால் தமிழன்னையின் காதுகளை குளிர வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது இறைவன் சித்தம் போலும்.... அது தான் அது தான் அடியேனுக்கு அவன் மறு வாழ்வு தந்திருக்கின்றான்'....என்கிறார் ஏழிசை அரசர்.

------ ------ -----

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

No comments: