Thursday, July 27, 2006
'செய்வன திருந்தச் செய்' ....சிவாஜி மாண்பு
நடிகர் திலகம் நடிக்கும் அந்தப் படத்தில் அவர் பாடுவதாக உணர்வு பூர்வமான பாடல் ஒன்று.
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வனாதன் அவர்கள் மிகவும் வித்தியாசமாக அந்தப் பாடலுக்கான மெட்டை உருவாக்கினார்.
டி.எம்.எஸ் பாட வேண்டிய பாடல் அது என்பதால்...அவரிடம் அந்தப் பாடலைப் பாடிக் காட்டினார் மெல்லிசை மன்னர்.
மெட்டைக் கேட்டுப் பார்த்த போது டி.எம்.எஸ் முகத்தில் திருப்தியின் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
நான் வழக்கமாகப் பாடும் பாடல்களில் இருந்து இந்தப் பாடலின் மெட்டமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
அது மட்டுமன்றி....இந்த மெட்டு என் பாணிக்கு ஒத்து வரக் கூடிய விதத்திலும் இல்லை....எனவே...மன்னிக்க வேண்டும் ..இந்தப் பாடலை என்னால் பாட முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் டி.எம்.எஸ்.
'நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது...இது கொஞ்சம் வித்தியாசமான மெட்டுத் தான்...என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்...
ஆனால்...உங்களுக்கு இருக்கும் அபாரமான இசைப் புலமைக்கும்...குரல் வளத்திற்கும் இந்தப் பாடலை உங்களால் வெகு சிறப்பாகப் பாட முடியும்...
எனவே நீங்கள் மறுக்காமல் இந்தப் பாடலைப் பாடிக் கொடுக்க வேண்டும் என்று டி.எம்.எஸ்ஸிடம் வேன்டுகோள் விடுத்தார் எம்.எஸ்.வி.
அப்படியா?..இந்தப் பாடலோடு என்னை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு இருக்கிறீர்களோ?..என்று மறுபடியும் கொஞ்சம் கோபமாகவே கேட்டார் டி.எம்.எஸ்.
ஆனால்...எம்.எஸ்.வி...தமது முடிவில் இருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை.
'நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்..இந்தப் பாடலும்..உங்கள் பாடல்களில்...மற்றுமொரு தனித்துவம் பெற்ற பாடலாக மிளிரத் தான் போகிறது...'என்று சொல்லிய எம்.எஸ் வி...டி.எம்.எஸ்ஸை சமாதானம் செய்து அந்தப் பாடலைப் பாட வைத்தார்.
பாடல் காட்சியில் நடிக்க வந்த நடிகர் திலகத்திடம் அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.
பாடலைக் கேட்ட நடிகர் திலகம்...'உடனடியாக படப் பிடிப்பை ரத்து செய்யுங்கள்.இன்னொரு தினம் இந்தப் பாடல் காட்சிக்கான படப் பிடிப்பை வைத்துக் கொள்ளலாம்...'என்றார்.
அவரிடம் காரணம் கேட்ட போது அவர் சொன்னார்.
'மிக மிக வித்தியாசமாக இந்தப் பாடலின் மெட்டை உருவாக்கி இருக்கிறார் எம்.எஸ்.வி அவர்கள்.
டி.எம்.எஸ் மிகவும் அபாரமாக...இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்து இருக்கிறார்.
இந்தப் பாடலை ஒரு சவாலான பாடலாக நான் கருதுகிறேன்.
டி.எம்.எஸ்ஸும், எம்.எஸ்.வியும் உயிரைக் கொடுத்து உழைத்த இந்தப் பாடலில் எனது நடிப்பும் உயிரோட்டமாக அமையுமாறு நான் பார்த்துக் கொள்ள வேண்டாமா? அதற்கு எனக்கு அவகாசம் வேண்டும்...அதனால் தான் படப் பிடிப்பை ரத்து செய்யச் சொன்னேன்...என்றாராம் சிவாஜி.
சொன்னது போலவே...அந்தப் பாடலை பல முறை கேட்டுப் பார்த்து...அந்த மெட்டையும்...டி.எம்.எஸ்ஸின் குரலில் உள்ள பாவங்களையும் நன்கு உள்வாங்கிக் கொண்ட நடிகர் திலகம்...மிக வித்தியாசமாக அந்தப் பாடல் காட்சியை நடித்துக் கொடுத்தார்.
அந்தப் பாடல் எது என்று கேட்கிறீர்களா?
'சாந்தி ' திரைப் படத்தில் இடம் பெற்ற ' யார் அந்த நிலவு?...ஏன் இந்தக் கனவு?....
அந்தக் காலத்துக் கலைஞரகளின் ஆழ்ந்த தொழில் ஈடுபாட்டுக்கும்.....'செய்வன திருந்தச் செய்' என்கின்ற தொழில் நேர்த்தியை மதிக்கின்ற மாண்புக்கும்...இந்த சம்பவம் ஒரு நல்ல எடுத்துக் காட்டு.
'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....
மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....
yazhsudhakar@gmail.com
என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மிகவும் இனிய அருமையான பாடல். மெல்லிசை மன்னரின் இசைத்தோட்டத்தில் பூத்த அடுக்குமல்லி!
Post a Comment