Thursday, July 27, 2006

அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் கசக்கிப் பிழிந்து விடுவார்.

தமது படங்களில் இடம் பெறும் பாடல்கள் விஷயத்தில் அதிக அக்கறையும் சிரத்தையும் எடுத்துக் கொள்ளுவார் எம்.ஜி.ஆர்.

தாம் எதிர்பார்க்கும் விதத்தில் மெட்டு வரும் வரையில் இசையமைப்பாளர்களை ஓய விட மாட்டார் எம்.ஜி.ஆர்.

இதைப் பற்றி ' மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கேட்டால் கதை கதையாகச் சொல்லுவார்.

தாம் நடிக்கும் படப் பாடல்களின் மெட்டுக்கள் மட்டுமன்றி...பாடல் வரிகளும் கூட மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதிலும் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளுவார்.

எந்தப் பெரிய கவிஞராக இருந்தாலும்...எம்.ஜி.ஆர், போதும் என்று சொல்லும் வரை ...அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பாடல் வரிகளை அடித்துத் திருத்தி எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் படங்களுக்கு மெட்டுப் போடுவதில் இருந்து பாடல் எழுதுவது வரை...இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு மிகுந்த பொறுமையும் , சகிப்புத் தன்மையும் அவசியமாக இருந்தது.

அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் கசக்கிப் பிழிந்து விடுவார்.

ஆனாலும் அளவுக்கு அதிகமான எம்.ஜி.ஆரின் தலையீடும், சிரத்தையும் தான் மற்ற நடிகர்களின் பழைய பாடல்களை விட எம்.ஜி.ஆரின் பழைய பாடல்களை இன்றைய 20 வயது இளைஞன் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் விரும்பிக் கேட்பதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்தன என்றால் அது மிகை அல்ல.

எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படம் 'நினைத்ததை முடிப்பவன்.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர், கொள்ளைக் கூட்டத்தின் மத்தியில் அவர்களை வேவு பார்க்க வந்து மாறு வேடத்தில் நின்று கொண்டிருக்கும் போலீஸ்காரர்கள் மத்தியில் பாடுவதாக ஒரு பாடல் காட்சி.

மெல்லிசை மன்னர் எம்.ஜி.ஆருக்கே உரித்தான உற்சாகம் பொங்கி வரும் விதத்தில் அருமையான ஒரு மெட்டமைத்து எம்.ஜி.ஆரிடம் பாடிக் காட்டினார்.

எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

ஒரு பிரபலமான கவிஞரை அந்த மெட்டுக்குப் பாடல் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

காட்சிச் சூழலை நன்கு கேட்டுத் தெரிந்து கொண்ட அந்தக் கவிஞர்...பாடல் எழுதி முடித்ததும் எம்.ஜி.ஆரிடம் படித்துக் காண்பித்தார்.

பாடல் வரிகள் நன்றாக இருந்தும் எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்த வரிகள் அமையாததால் மீண்டும் புதிதாக சில பல்லவிகளையும் ,சரணங்களையும் எழுதச் சொன்னார்.

அந்தக் கவிஞரும் சளைக்காமல் எழுதிக் கொடுத்தார்.

ஆனாலும் எம்.ஜி.ஆர் முகத்தில் திருப்தி இல்லை.

வேறு ஒரு பிரபல கவிஞரை அழைத்து இதே மெட்டுக்கு எழுத வைத்தார்கள்.

அந்தப் பாடலிலும் மக்கள் திலகத்துக்குத் திருப்தி இல்லை.

இதே போல அந்த நாளில் பிரபலமாக இருந்த 5, 6 கவிஞர்கள் அந்த மெட்டுக்குப் பாடல் எழுதப் பணிக்கப்பட்டனர்.எந்த வரிகளுமே எம்.ஜி.ஆரை வசீகரிக்கவில்லை.

கடைசியில் ஒரு மூத்த கவிஞரைக் கூப்பிட்டு எழுதச் சொன்னார்கள்.

பாடல் வரிகளைக் கேட்ட எம்.ஜி.ஆர் முகத்தில் பூரண சந்திரனாக புன்னகை பொங்கி வழிந்தது.

'இது தான் இதே தான் நான் எதிர் பார்த்தது ! என்றார் எம்.ஜி.ஆர்.

உடனே பாடல் ஒலிப் பதிவுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார் எம்.ஜி.ஆர் உற்சாகம் பொங்க.

அந்தப் பாடல் தான்....

' கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது...

அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்அடையாளம் காட்டும்பொய்யே சொல்லாதது ...'என்ற பாடல்.

எம்.ஜிஆரின் எதிர்பார்ப்பைப் பாடலில் கொண்டு வந்த அந்தப் பாடலாசிரியர் யார் என்று கேட்கின்றீர்களா?

கவிஞர் மருத காசி.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

No comments: