Thursday, September 14, 2006
தாமதமாக வந்து பெயரைத் தட்டிச் செல்லும் டி.எம்.எஸ்...
இன்னொரு பாடகருடன் அல்லது பாடகியுடன் இணைந்து பாடும் பாடல்களில் குயில் குதூகலத்துடன் டி.எம்.எஸ். செய்யும் வித்தைகள் பற்றி சென்ற வாரங்களில் பார்த்தோம்.
இந்த வாரமும் இதே சுவாரஸ்யங்களை நினைவுபடுத்தும் சில பாடல்களைப் பற்றிப் பார்க்கலாம்.
விஜயபாஸ்கரின் இசையில் உருவான படம் 'கல்யாணமாம் கல்யாணம்'.
இந்தப் படத்தில் 'இளமை நாட்டிய சாலை ' என்ற பாடலை முதலில் எஸ்.ஜானகி அவர்கள் தான் பாட ஆரம்பிப்பார்.
பல்லவி முழுவதையும் அவர் பாடி சரணத்திலும் சில வரிகளைப் பாடிய பின்பு... எதிரொலியுடன் கூடிய ஒரு 'ஹம்மிங்' கொடுத்தபடி... 'ஆத்தங்கரையில் காத்திருந்தாள் பாமா' என்று சொல்லிக் கொண்டே மண் வாசனை கம கமக்க டி.எம்.எஸ், உள்ளே வரும் அழகே தனி.
ஆர். கோவர்த்தனம் அவர்களின் இசையில் வெளிவந்த படம் ' பட்டணத்தில் பூதம்'.
இந்தப் படத்தில் 'அந்த சிவகாமி மகனிடம் சேதி கேளுங்கள்' என்ற பாடலை பல்லவியில் ஆரம்பித்து பாதித்தூரம் வரை சுசீலா பாடி விடுவார்.
அவர் பாடி முடிந்ததும்...விஸ்தாரமான ஒரு 'எக்கோ' வுடன் -'ஹம்மிங் 'கொடுத்தபடி டி.எம்.எஸ். பாடலோடு வந்து இணைகின்ற அழகைப் பாராட்ட கைவசம் என்னிடம் வார்த்தைகள் இல்லை.
குடியிருந்த கோயில் 'படத்தின்' 'துள்ளுவதோ இளமை' பாடலை விட்டு விட்டீர்களே என்று கேட்கிறீர்களா?
எப்படி விட முடியும் ?
விடாமல் துரத்துகின்ற வசீகரப் பாடல்களில் இதுவும் ஒன்றாச்சே?...
எல்.ஆர்.ஈஸ்வரி , துள்ளல் நடைபோடும் துடிப்பான குரலில் பல்லவியைப் பாடி , சரணத்தையும் முடித்ததும் 'பா...பபபப்பா...' என்று போதையூட்டும் உற்சாகத்தைக் காற்றிலே ஊற்றிக் கொண்டே டி.எம்.எஸ். பறந்து வரும் அழகு ..பரவசம்!... அடடா!
'ராமு' படத்தில் ' கண்ணன் வந்தான்' பாடலை சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் ஆரம்பித்து சரணத்தையும் பாடி முடித்த பிறகு....
'கருணை என்னும் கண் திறந்து காக்க வேண்டும் ' என்று சொல்லிக் கொண்டே டி.எம்.எஸ். உள்ளே வருகின்ற போது .. அந்த ஆரம்ப நெகிழ்ச்சியில் ....பரவசத்தில் கல்மனசு கூட கற்பூரமாக உருகும்.
'ஒளிவிளக்கு' படத்தில் 'ருக்குமணியே பற பற பற...' என்று
எல்.ஆர்.ஈஸ்வரி ஆரம்பித்துவைப்பார்.
அவர் பாடிக் கொண்டிருக்கும் போதே...ப்ளீஸ் ஒன்ஸ் அகெய்ன்' என்று டி.எம்.எஸ் சொல்லுவார்.
அந்த ஒரு வார்த்தையே... அவரது கம்பீரமான வருகையை
கனத்த ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைக்கும்.
THE ONE AND ONLY TMS!
'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....
மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....
yazhsudhakar@gmail.com
என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)